நேருவுக்கு எதிராக வெடிக்கிறது பகிரங்க மோதல்- அரசு விழாவில் திமுக உட்கட்சி களேபரம்

திருச்சி மாவட்டத்திலேயே திமுக அதிக முறை ஜெயித்த சட்டமன்ற தொகுதி லால்குடி தான். அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக அங்கே ஜெயிக்கும்
அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான மனநிலையில் எம்.எல்.ஏ உள்ளதால், அரசு விழாவில் கூட பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார்.

திருச்சியில் அடையாளம் கிடைத்து, இப்போது தமிழகம் முழுவதும் அறியப்பட்டவராக திமுகவின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் நேரு விளங்கினாலும் அவரது ஆரம்பகால அரசியல், அவர் முதல் முறையாக எம்எல்ஏ ஆனது எல்லாம் லால்குடியில் தான். அங்கிருந்து அவர் திருச்சிக்கு இடம்பெயரும் போது தனக்கு மிகவும் நம்பிக்கையான சவுந்தரபாண்டியனிடம் லால்குடி சட்டமன்றத்தை ஒப்படைத்தார். சவுந்தரபாண்டியனும் கடந்த நான்கு முறை அங்கே வெற்றி பெற்று இரண்டு முறை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வாகவும் இரண்டு முறை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாகவும் செயல்பட்டு வருகிறார்.

லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக திறப்பு மற்றும் கே.என். நேருவின் சொந்த ஊரான கானக்கிளியநல்லூர் அங்கன்வாடி மைய திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திமுகவின் முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான நேரு, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள, உள்ளூரிலேயே இருந்து கொண்டு அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார் எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன்.

இது திமுக வட்டாரத்தை தாண்டி அரசு அதிகாரிகள் மட்டத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எம்.எல்.ஏ தரப்பில் சிலரிடம் பேசிய போது, 'பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை பணிகள் நடந்தாலும் அதன் பலன்கள் அமைச்சர் நேரு தரப்பால் அபகரிக்கப்பட்டதால்தான் இப்படி அதிருப்தியில் இருக்கிறார். கூட்டுறவுத் துறையில் ரேஷன் கடை பணியாளர்கள் நியமனம் நடந்த போது கூட எம்.எல்.ஏ கொடுத்த ஒரே ஒருவருக்குத்தான் வாய்ப்பு தந்தார்கள். ஒன்றிய செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளில் இருந்த அவர், இப்போது எல்லா பதவியும் பறிக்கப்பட்டு சாதாரண உறுப்பினராக தான் இருக்கிறார். கடனும் அதிகமாக இருக்கிறது. பாவம் யாருக்கும் கெடுதல் நினைக்காத நல்ல மனிதர். தன்னுடைய அதிருப்தியை வெளிக்காட்டும் குறியீடாகத்தான் இந்த நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை' என்றனர்.

சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ
சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ

சவுந்தரபாண்டியனிடம் கேட்டபோது, "நான் உள்ளூரில் இருந்தது உண்மைதான். சூழ்நிலை சரியில்லை. அதனால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதற்கு மேல் பத்திரிகையாளர்களிடம் நான் எதுவும் சொல்லக்கூடாது. கட்சியில் பேசிக்கிறேன்" என்றார் அவர்.

சமீபத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, நேருவின் மீதான அதிருப்தியை வெளிப்படையாக பேட்டி தந்து அதிர்வலைகளை உருவாக்கினார். ஆனால் திருச்சி மாவட்டத்தில் நேருவை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் காணாமல் போனதுதான் வரலாறு.

சில மாதங்களுக்கு முன் புத்தூர் நால்ரோடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், மேடையில் அமைச்சர் பொன்முடியை வைத்துக் கொண்டே, மைக்கில் எம்.எல்.ஏக்கள் குறித்து 'நமக்கு வாய்த்த அடிமைகள்' என்று நேரு பேசியது எம்.எல்.ஏக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சில எம்.எல்.ஏக்கள் பக்கத்து மாவட்ட அமைச்சருடன் நெருக்கமாக இருப்பது குறித்து பேச்சு வந்தபோது, 'இடைத்தேர்தல் வந்துரும் பாத்துக்க...' என்று எம்.எல்.ஏக்கள் இடமே சொல்லி இருக்கிறார் நேரு.

திருச்சி தி.மு.க மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி
திருச்சி தி.மு.க மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி

இந்த சலசலப்பு குறித்து தி.மு.க-வின் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணியிடம் கேட்டபோது, "அவர் (நேரு) இல்லாமல் இவர் (எம்.எல்.ஏ) இல்லை 2006ல் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் எம்.எல்.ஏ. அந்த அளவுக்கு உழைத்து சாதாரண ஆளைக்கூட ஜெயிக்க வைக்கிற அளவுக்கு கடந்த 35 வருஷமா கட்சியைக் காப்பாற்றி வைத்திருப்பவர் நேரு தான். எதுவாக இருந்தாலும் அவரிடம் பேசலாம். பொதுவெளியில் இப்படி நடந்து கொள்வது தவறு. அமைச்சருடைய சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சியிலேயே கலந்துக்காம தன்னுடைய வருத்தத்தை பொதுவெளியில் காட்டினது மிகப்பெரிய தவறு.

கடந்த ஒரு வருஷமா அவர் கட்சியின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை.சௌந்தரபாண்டியன் 'கட்சிப் பதவிகள் வேண்டாம்' என்று அமைச்சர் நேருவிடம் சொல்லிவிட்டு போகும்போது நான் அந்த இடத்தில் இருந்தேன். எனக்கு நன்றாக தெரியும். 'கட்சியே எனக்கு வேண்டாம்; இனிமேல் அரசு நிகழ்ச்சியில் மட்டும் தான் கலந்து கொள்வேன்' என்று சொல்லிவிட்டே போய்விட்டார். திருச்சி மாவட்டத்திலேயே திமுக அதிக முறை ஜெயித்த சட்டமன்ற தொகுதி லால்குடி தான். அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக அங்கே ஜெயிக்கும்" என்றார் அவர்.

- ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com