நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடுகளை சரியாக அதிகாரிகள் நடத்தாததால் அமைச்சர் காந்தி கோபத்துடன் சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில், தமிழக அரசு சார்பில் 500 முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகள் உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கும் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கள் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி பங்கேற்று இருந்தார். ஓசூர், தளி சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணகிரி எம்.பி, ஓசூர் மேயர் முன்னிலை வகித்த கூட்டத்தில் 540 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என கூறப்பட்டு 200 நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்தது. 50 நாற்காலிகள் வரை திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தனர்.
நலத்திட்ட உதவிகள் பெற வந்த முதியவர்கள் மற்ற பயனாளிகள் அமர நாற்காலி இல்லாமல் கால் கடுக்க நின்று கொண்டும், தரையில் அமர்ந்து ஆணைகளை பெற்றுக் கொண்டிருந்தனர். இதனால் தலைவர்கள் சீக்கிரம் பேசி முடிக்க மாட்டார்களா எனக் காத்துக்கிடந்தனர். மண்டபத்தில் வைக்கப்பட்ட ஸ்பீக்கரும் சரியாக வேலை செய்யாததால் பொதுமக்கள் அமைச்சர் என்ன பேசுகிறார் என தெரியாமலும், கைதட்டாமலும் அமர்ந்திருக்க, அமைச்சர் காந்தி கோபமானார்.
பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கப் பயனாளிகளை மாவட்ட மக்கள் தொடர்பு திட்ட அலுவலர் மோகன் சரியாக ஒருங்கிணைப்பு செய்யாமல் மேடைக்கு வரிசையாக அனுப்பி வைத்தார். வாசிக்கும் பெயருக்கும் பயனாளிகளும் வேறுநபர்களாக இருந்ததால் சரியான ஏற்பாடு செய்யவில்லை என மேடையிலேயே கிருஷ்ணகிரி மக்கள் தொடர்பு அதிகாரிகளையும், மற்ற அதிகாரிகளையும் அமைச்சர் காந்தி எச்சரித்தார்.
’’அமைச்சரே கோபப்பட்டுட்டாரு..’’என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஓசூர் சாராட்சியர் சரண்யா ஆகியோர் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். ’’என்னய்யா வேல பார்க்குறீங்க...’’என்றவாறே அமைச்சர் காந்தி சிடு சிடு என முகம் சுழித்து கடந்து சென்றார்.
-பொய்கை. கோ. கிருஷ்ணா