'துணை முதலமைச்சராக இருந்தபோது என்னிடம் அதிகாரங்கள் இல்லை. அதனால் கொடநாடு வழக்கில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது வைத்திலிங்கம் பேசுகையில், ‘கோடநாடு வழக்கை விரைந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடநாடு சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.
கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடநாடு விவகாரத்தில் முதல்வர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கொடநாடு வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆக.1 போராட்டம் நடைபெறும்’’ என்றார்.
பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘கொடநாடு வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.
துணை முதலமைச்சருக்கு அரசில் எந்த அதிகாரமும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகியும் கொடநாடு வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை.
கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தி.மு.க வாக்குறுதி கொடுத்தது. அ.தி.மு.க, இரட்டை இலை வழக்கில் சட்டப் போராட்டம் தொடர்கிறது.
பா.ஜ.க கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தற்போது வரை எனக்கு அழைப்பு வரவில்லை. பா.ஜ.க தலைவர்கள் எங்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர்’ என்றார்.