'ஐ.டி. அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க-வினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை மூலம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழக அமைச்சர்களில் ஒருவரான செந்தில் பாலாஜியின் கரூர் வீடுகள் மற்றும் நிறுவனங்கள்; அவருடைய சகோதரர் மற்றும் மைத்துனர், நண்பர்கள் என 40-க்கும் மேற்பட்டோருடைய இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டில் இறங்கியுள்ளனர்.
வருமான வரித்துறையினர் சாதாரணமான சிவில் அதிகாரிகளைப் போன்றவர்கள். அவர்கள் ஆயுதபாணிகள் அல்ல, நிராயுத பாணிகள்.
அவர்கள் இது போன்று திடீரென்று செல்லக்கூடிய இடங்களுக்கு முன்பாக அந்த செய்தி கசிந்து விடும் அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு போய்ச் சேர்ந்து விடும் என்பதற்காக முன்கூட்டியே பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு தெரிவிப்பதில்லை. அதாவது அது எந்த மாநிலமாக இருந்தாலும் அந்த மாநில காவல்துறையினரிடம் தெரிவிப்பது வழக்கம் இல்லை. சில வேளைகளில் அவர்கள் காவல்துறையின் உதவியை நாடலாம்.
அதாவது, அரசியல் பின்புலம் அற்ற வணிக நிறுவனமோ, தொழில் அதிபராக இருந்தால் காவல்துறையினரின் உதவியை முன்கூட்டியே நாடுவார்கள்.
ஆனால், சம்பந்தப்பட்ட நபர் தமிழ்நாட்டில் அமைச்சரவையில் அங்கம் பெறக்கூடியவர். அதுவும் கரூரைச் சொந்த மாவட்டமாகக் கொண்டிருக்கக் கூடியவர்.
வருமான வரித்துறையினரின் வருகை குறித்த தகவல்களை அந்த மாவட்டத்தினுடைய காவல்துறை அதிகாரிகள் இடத்திலேயே தெரிவிக்கப்பட்டால் உயர் அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும், அவருக்கு கீழே இருக்கக்கூடிய அதிகாரிகளில் பலருக்கு ஆளுங்கட்சி அமைச்சரோடோ அல்லது ஆளுங்கட்சி நிர்வாகிகளோடு உறவிருக்கும் என்பதால் அச்செய்தி கசிந்து விடும் என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக வருமான வரித்துறை எவ்வித தகவலும் இல்லாமல் சோதனைக்காகச் சென்றிருக்கிறார்கள் என்றால் அவர்களது கடமையைச் செய்கிறார்கள் என்று பொருள்.
எனவே, வருமானவரித்துறையினர் தங்களுடைய அடையாள அட்டைகளைக் காண்பித்து இது போன்ற சோதனைக்காக வந்திருக்கிறோம் என்று சொன்ன பிறகும் பாலாஜியோ அல்லது அவரது சகோதரரோ அல்லது உறவினர்களோ, நண்பர்களோ பூரண ஒத்துழைப்பு கொடுத்து இருக்க வேண்டியது கட்டாயம்.
யார் வீட்டில்? யார் சோதனை இடுவது? என்று ஒரு கும்பல் வருமானவரித்துறை அதிகாரிகளை குறிப்பாக பெண் அதிகாரி உட்பட பலரை வசைபாடியும், அச்சுறுத்தியும், அவர்கள்மீது தாக்குதல் தொடுத்தும் உள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட 4 அதிகாரிகள் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள் என்று சொன்னால் எந்த அளவிற்கு செந்தில் பாலாஜியும், அவர்களைச் சார்ந்தவர்களும் கரூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. இந்த அடாவடி செயலை ஒரு கணம் கூட ஏற்றுக் கொள்ள இயலாது.
வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க-வினர் உட்பட அனைவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.