ஒரே நாடும், ஒரே தேர்தல் வேண்டும் என்று 1971ஆம் ஆண்டு கருணாநிதியே பேசி இருக்கிறார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ’என் மண், என் மக்கள்’ 2ஆம் கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கினார். தேனி மாவட்டத்தில் 2வது நாளாக நேற்று கம்பம், போடியில் பாத யாத்திரை சென்றார். அப்போது பேசிய அண்ணாமலை, “இந்தியா முழுவதும் எண்ணற்ற மத்திய அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.தமிழ்நாட்டில் கேந்திரி வித்யாலா பள்ளிக்கு அனுமதி கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். நிலம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். மாநில அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
மேலும், கம்பம் கேரளாவின் குப்பை மேடாக மாறிக்கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்தின் மருத்துவ கழிவுகள் கம்பத்தில் கொட்டப்படுகிறது. சாராய ஆலைகளை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடுவோம் என்று பொய் சொன்னது திமுக. இந்தி மொழியை பயிற்றுவிக்கும் பள்ளிகளை நடத்துவார்களாம். ஆனால் இந்தி திணிப்பு என்று எதிர்ப்பார்களாம். 2010ஆம் ஆண்டு நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரசும். ஆனால் 2023ல் நீட்டை எதிர்க்கிறார்களாம்.
உதயநிதி ஸ்டாலினின் அம்மா கோவில் கோவிலாக போவராம்.ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதன தர்மம் வேண்டாமாம். இதைவிட கேடுகெட்ட கட்சியை பார்த்து இருக்கிறீர்களா? சனாதன தர்மத்தில் மட்டும் தான் ஒரு மனிதன் கடவுளாக முடியும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஊழல்வாதிகள். இந்த நாட்டுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்று 1971ஆம் ஆண்டு கருணாநிதி பேசி இருக்கிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தல் ஒரு வரலாற்று தேர்தல்.மோடியை 3-வது முறையாக பிரதமராக்க தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பிக்களை அனுப்பி வைக்க வேண்டும்” என்றார்.