முதலமைச்சர் தேர்வு விவகாரம் தொடர்பாக டெல்லி செல்ல இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவக்குமார் டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால், அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதில், சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா டெல்லி சென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் டெல்லி செல்ல இருந்தார். இந்த நிலையில், டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளார் சிவகுமார்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார், 'எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று டெல்லி செல்லவில்லை. என்னிடம் எந்த எம்.எல்.ஏ-வும் இல்லை. முதலமைச்சரை தேர்வு செய்வது கட்சி மேலிடம்தான்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு உள்ளது. எனவே, அவருக்கு எனது வாழ்த்துகள்' என்றார்.
இதனால், அம்மாநிலத்தின் அடுத்த முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.