கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி மீது செல்போன் வீசப்பட்டது குறித்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அங்கு வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
கர்நாடக பா.ஜ.க-வில் முக்கியத் தலைவர்கள், எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இருந்து விலகியுள்ள நிலையில் பா.ஜ.க-வுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவரை நோக்கி திரண்டிருந்த தொண்டர்கள் மலர் தூவியபோது திடீரென மோடியை நோக்கி ஒரு செல்போன் பறந்து வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த செல்போன் பிரதமர் மோடி மீது விழவில்லை. ஆனால் மோடியின் பிரசார வாகனத்தின் மீது விழுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செல்போனை வீசியது யார்? என போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். இதன் பிறகு அந்த செல்போன் பா.ஜ.க தொண்டர் ஒருவருடையது என்றும், பிரதமர் மோடியை பார்த்த மகிழ்ச்சியில் அவர் கைகளை வேகமாக அசைத்தபோது செல்போன் தவறி விழுந்ததாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிரதமர் மோடியின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.