கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஜெயநகர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சி.கே. ராமமூர்த்தி, வெறும் 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில், பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட கட்சிகள் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது.
ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களிலும், பா.ஜ.க 65 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஜெயநகர் தொகுதியில், வெறும் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் சி.கே. ராமமூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
ஜெயநகர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. பியூ கல்லூரியில் காலை முதல் தொடங்கியது. அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.எஸ். ரெட்டி 177 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், இதற்கு, பா.ஜ.க தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இதனால், அங்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் குவிந்தனர். அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவியது. பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர்.
பெங்களூரு தெற்கு எம்.பி. தேஜஸ்வி சூர்யா மற்றும் பத்மநாபநகர் எம்.எல்.ஏ. ஆர். அசோக் ஆகியோர், தொழில்நுட்ப காரணங்களால் நிராகரிக்கப்பட்ட 177 தபால் வாக்குகளுக்கு ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால், மாவட்ட தேர்தல் அதிகாரி துஷார் கிரிநாத் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, நிராகரிக்கப்பட்ட 177 தபால் வாக்குகள் மறு வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டது. இதில், பா.ஜ.க வேட்பாளர் சி.கே. ராமமூர்த்தி 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், 'ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.எஸ். ரெட்டிதான் வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால், மறு வாக்கு எண்ணிக்கை என்ற பெயரில் , தேர்தல் அதிகாரிகள் தவறான முடிவுகளை எடுத்துள்ளனர். இதனை கண்டித்து நாங்கள் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியுள்ளோம். நீதிமன்றத்தின் மூலம் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம்' என்றார்.