நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவைச் சேர்ந்த 14 அமைச்சர்கள் படுதோல்வி அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன.
இதனைத்தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 121 இடங்களிலும் பா.ஜ.க 48 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 16 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 121 இடங்களிலும் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த 14 அமைச்சர்கள் படுதோல்வி அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதில், திப்தூர் தொகுதியில் போட்டியிட்ட கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ், நாவல்குண்ட் தொகுதியில் போட்டியிட்ட துணி நூல் துறை அமைச்சர் சங்கர் மூனனேகுப்பா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
வருணா தொகுதி வேட்பாளரான வீட்டு வசதி துறை அமைச்சர் வி.சோமண்ணா, சிக்கப்பள்ளாபுரா நகர் தொகுதி வேட்பாளரான சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் தோல்வியை தழுவினர்.
முத்தோள் தொகுதியில் பாசனத்துறை அமைச்சர் கோவிந்த கார்ஜோள் மற்றும் சன்னபட்னா தொகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
பெல்லாரி ஊரகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.ஸ்ரீ.ராமுலு, பீளகியில் தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தனர்.
சிக்கநாயகனஹள்ளி தொகுதியில் களம் இறங்கிய சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மாதுசாமி, சிர்சி தொகுதியில் போட்டியிட்ட சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தனர்.
கிருஷ்ணராஜ் பேட் தொகுதி வேட்பாளரான விளையாட்டுத்துறை அமைச்சர் கே.சி.நாராயண கவுடா, ஹிரேகேரு தொகுதி வேட்பாளரான விவசாயத் துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் ஆகியோர் தோல்வி முகம் கண்டனர்.
எல்புர்கா தொகுதியில் களம் இறங்கிய சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர் ஹாலப்பா ஆச்சார், ஒசகோட்டை தொகுதி வேட்பாளரான சிறு குறு தொழில் வளத்துறை அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.