கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி பேசுகையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடம் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த இரண்டு கட்சிகளால் மாநிலத்தில் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் மட்டுமே அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் வரும் 10-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பா.ஜ.க, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளி்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, பா.ஜ.க வேட்பாளர்களுக்காக, பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். சித்ரதுர்காவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி அனல்கக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 'பா.ஜ.கவால் மட்டுமே நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். காரணம், ஊழல் இல்லாத அரசை பா.ஜ.க-வில் மட்டுமே கொடுக்க முடியும்.
காங்கிரஸ் மனசாட்சிக்கு விரோதமான கட்சி. கடந்த 2008-ல் டெல்லி பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டரில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கண்ணீர் சிந்தினார்கள். இந்திய ராணுவம் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்திய போது, நமது ராணுவத்தின் திறமையை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதுதான் காங்கிரஸ். இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி தேவையா?
குறிப்பாக, கர்நாடகாவிலும் பயங்கரவாதத்தை காங்கிரஸ் எப்படி வளர்த்தது என்பது பலருக்கும் தெரியும். ஆனால், பா.ஜ.க அந்த பயங்கரவாதத்தை முறியடித்துவிட்டது. வரும் காலத்திலும் முறியடிக்கும்.
எனவே, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடம் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த இரண்டு கட்சிகளால் மாநிலத்தில் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் மட்டுமே அதிகரிக்கும்' என்றார்.