கர்நாடகாவில் நாளை முதலமைச்சர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பு செய்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளைப் பெற்று தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
முதலமைச்சர் யார்? என்று சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால், முதலமைச்சரவை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக சித்தராமையாவை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பெங்களூரில் உள்ள காண்டீரவா மைதானத்தில் நாளை , அதாவது 20-ம் தேதி முதலமைச்சராக சித்தராமையா நாளை பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என அறிவிக்கப்பட்டது. இதற்கான முறையான அழைப்பும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கர்நாடகாவில் நாளை முதலமைச்சர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முக்கிய பிரதிநி ஒருவர் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.