224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று (புதன்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதற்கான வாக்குப்பதிவு 224 தொகுதிகளிலும் தொடங்கியுள்ளது. காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குபதிவுகள் நடைபெறும்.
கர்நாடகத்தில் முதலமைச்சர் பசவராஜ்பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆட்சிக்கான பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய ஆட்சி பதவி ஏற்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம், 224 தொகுதிகளை கொண்டுள்ள கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி (அதாவது இன்று) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29-ந்தேதி அறிவித்தது.
இந்நிலையில் 224 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பாரத ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும், 918 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஒரே ஒரு திருநங்கை போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி படைத்தவர்களாக உள்ளனர். இந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்து 777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மொத்தம் 75 ஆயிரத்து 603 மின்னணு வாக்கு எந்திரங்களும், 70 ஆயிரத்து 300 கட்டுப்பாட்டு எந்திரங்களும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சட்டம் ஒழுங்கை காக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.