"காரைக்குடிக்கும் வாரணாசிக்கும் தொடர்பு உள்ளது"- அண்ணாமலை வெளியிட்ட ரகசியம்

நகரத்தார் மக்களுக்குச் சொந்தமான 240 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்டுகொடுக்கப்பட்டுள்ளது
காரைக்குடியில் அண்ணாமலை
காரைக்குடியில் அண்ணாமலை

காரைக்குடிக்கும் வாரணாசிக்கும் தொடர்பு உள்ளது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

"என் மண், என் மக்கள்" நடைபயணம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, காரைக்குடிக்கும் பாரதப் பிரதமர் மோடி தொகுதியான வாரணாசிக்கும் பெரும் தொடர்பு, பந்தம் உள்ளது. காசி விஸ்வநாதருக்கு தினமும் 3 வேளை அபிஷேகம் செய்யும் பால், காரைக்குடி நகரத்தார் சமூகத்தினரால் வழங்கப்படுகிறது.

நகரத்தார் மக்களுக்குச் சொந்தமான 240 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, சமாஜ்வாதி கட்சியினரிடமிருந்து மீட்டு நகரத்தார் அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார் உபி முதல்வர் யோகி. எனவே, பாரதப் பிரதமர் மீதான காரைக்குடி மக்களின் அன்பு இயற்கையானது.

வரலாற்றுச் சிறப்புமிக்க காரைக்குடிக்கு, வழக்கம் போல போலி வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றியதைத் தவிர தி.மு.க ஒன்றும் செய்யவில்லை.

பல கல்லூரிகள் அமைப்போம், காவிரி குண்டாறு இணைப்போம் என்று வெறும் வாய்ஜாலம் மட்டுமே காட்டி, இரண்டு ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. தி.மு.க. பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு என்று பொய் சொல்லி, குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா செல்வதே முதல்வருக்கு போதுமானதாக இருக்கிறது.

இன்னொரு புறம், காங்கிரஸ் கட்சியின் தந்தை மகன். அவர்களால் இந்தப் பகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை நடந்திருக்கிறதா? ஊழல் வழக்குகளுக்கு ஜாமீன் வாங்கவே நேரம் சரியாக இருக்கிறது அவர்களுக்கு.

சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களால் பயனடைந்தவர்கள் பல லட்சம் பேர். அனைத்து நலத்திட்டங்களும் தொடர, ஊழல் மற்றும் வாரிசு கட்சிகளை புறக்கணிக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்பதற்கு, இங்கே கூடியிருந்த பொதுமக்கள் கூட்டமே சாட்சி என தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com