காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடம் ரூ 20 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு காவலர்கள் இருவர் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் ரூ.40 கோடி வரை வசூலித்துவிட்டு தலைமறைவான காவலர் ஆரோக்கிய அருண் குடும்பத்தினர் சிறையில் உள்ள நிலையில், அவர்களிடம் பணம் கொடுத்து விட்டதாகக் கூறி ஸ்ரீபெரும்புதூரில் இரு போக்குவரத்து காவலர்கள் தலைமறைவாகி உள்ளனர். இது குறித்து இரு காவலர்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தலைமுறைவாக உள்ள இரு காவலர்களும் விரைவாக விளக்கம் அளிக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றி வருபவர்கள் தலைமை காவலர் யுவராஜ் மற்றும் காவலர் மனோகர். இவர்கள் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஒரகடம் சுங்குவார்சத்திரம், மணிமங்கலம், சோமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் உள்ள காவலர்களிடமும், பொதுமக்களிடமும் ’’ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் 5000 ரூபாய் பெற்று தருகிறோம்’’ என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பி பொதுமக்கள் மற்றும் போலீசார் லட்சம் லட்சமாக பணத்தை இவர்களிடம் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்தவர்களிடம் இரண்டு மாதங்கள் மட்டும் மாதம் லட்சத்துக்கு ஐயாயிரம் ரூபாயை கொடுத்துள்ளனர். அதன் பிறகு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வட்டிப் பணம் தராததால் பணத்தை பறி கொடுத்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பணத்தை கேட்டபோது நாட்களை கடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் மனோகர் தனது சொந்த ஊரான சித்தாத்தூரில் 3 கோடி மதிப்பில் வீடும், காம்ப்ளக்ஸும் கட்டியுள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அவருடைய சகோதரியின் திருமண விழாவிற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து தடபுடலாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தன் தங்கைக்கு மட்டும் 100 பவுன் நகை போட்டு திருமணம் செய்து கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவருடைய மனைவிக்கு 150 பவுன் நகையும், அவருடைய அம்மாவுக்கு 70 பவுன் நகையும் வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வாலாஜாபாத் அருகில் 4 கோடி மதிப்புள்ள இடத்திற்கு 50 லட்சம் அட்வான்ஸ் பணம் கொடுத்து அக்ரீமெண்ட் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி பணி முடிந்து சென்ற இருவரும் கடந்த மூன்று நாட்களாக வேலைக்கு வரவில்லை. போன் செய்தாலும் போன் சுவிட்ச்- ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பணத்தை பறிகொடுத்த காவலர்களும் பொதுமக்களும் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட 94 காவலர்கள் குறைந்தபட்சமாக 3 லட்சம் முதல் அதிகபட்சமாக 90 லட்சம் வரை பறிகொடுத்துவிட்டு விழி பிதுங்கி நிற்கின்றனர். இதில் காவல் ஆய்வாளர், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் காவல்நிலைய காவலர்களும் அடங்குவர்.
அதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் கடந்த மாதம் 40 கோடி வரை வசூல் செய்து விட்டு பணத்தை திரும்ப தர முடியாமல் தப்பி சென்ற
ஆரோக்கிய அருண் மற்றும் அவரது சகோதரர் இருதயராஜ் என இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரும் சிறையில் உள்ள நிலையில் அவர்களிடம் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனோகர், ஆரோக்கிய அருணிடம் 20 கோடி வரை கொடுத்து விட்டதாகவும், அதனை வாங்க முடியாத சூழல் உள்ளதாகவும் பணத்தை கொடுத்த போலீசாரிடம் கூறி உள்ளனர் தலைமறைவாகி உள்ள காவலர்கள்.
தற்போது காவல்துறையினரிடம் மட்டுமே 14 கோடி, பொதுமக்களிடம் 7 கோடி என மொத்தம் 20 கோடி வரை வசூல் செய்து விட்டு போக்குவரத்து காவலர்கள் யுவராஜ் மற்றும் மனோகர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.