கள்ளக்குறிச்சி அருகே ஓ.பன்னீர்செல்வத்தை கோமாளி போல் சித்தரித்து ஓட்டப்பட்டுள்ள அவதூறு போஸ்டர்களால் அவரது ஆதரவாளர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதற்கு பின்னர் அவர் தொடர்ந்து அ.தி.மு.க-வின் கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி வருகிறார்.
இதனைக் கண்டிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் போஸ்டரில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கோமாளி போன்று சித்தரித்தும் அவரை கண்டித்து வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த போஸ்டர்களை ஏராளமான மக்கள் பார்த்து செல்கின்றனர். பொதுக்குழு உறுப்பினர்கள் அ.தி.மு.க என்று அந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் மதுரையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”அ.தி.மு.க-வில் மீண்டும் இணைவதற்கு நான் தூது அனுப்பியதாக பழனிசாமி கூறுவது பொய்யான தகவல் என்றும் இது போன்று அவர் தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அண்டப்புழுகு, ஆகாச புழுகு என்பதற்கான சான்றாக அவர் செயல்படுகிறார் என்றும் விமர்சித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இன்று உளுந்தூர்பேட்டை பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் குறித்து அவதூறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.