முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் என்ற ஜல்லிக்கட்டுக்காளை இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஒன்றில் வாடிவாசல் முகப்பில் நிறுத்தி இருந்த மரக்கட்டையில் மோதி உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
விஜயபாஸ்கர் காலங்காலமாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்தவர் அல்ல. அதே நேரத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடத்தப்பட்ட பிறகு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியும் கிடைத்த பிறகு அவருக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் மீதும் ஜல்லிக்கட்டுக்காளை வளர்ப்பதின் மீதும் ஈர்ப்பு ஏற்பட்டு முதன்முதலாக ஒரு காளை வாங்கினார். அந்தக் காளையின் பெயர் கொம்பன். புதுக்கோட்டையை அடுத்துள்ள கைக்குறிச்சி என்ற கிராமத்தில் நிறைய ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடமிருந்து சிறந்த காளைகளில் ஒன்றான கொம்பனை முதன் முதலாக வாங்கி வந்தார். களம் கண்ட வாடி வாசல்களில் எல்லாம் வெற்றி வாகை சூடி வந்த அந்த கொம்பன் காளை, பல தங்க பரிசுகளையும் சிறப்பு பரிசுகளையும் பெற்றது.
அதனைத் தொடர்ந்து மேலும் பல காளைகளை விலைக்கு வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினார். முதன்முதலாக வாங்கி வந்த அந்த கொம்பன் காளையானது தமிழ்ச்செல்வன் களத்தில் பழக்கி வைத்திருந்தாலும் 15 லட்சம் ரூபாய் வரை விலைக்கு கேட்ட போதெல்லாம் யாரிடமும் கொடுக்காமல் வைத்திருந்த தமிழ்ச்செல்வன் வெறும் ஏழு லட்ச ரூபாய்க்கு விஜயபாஸ்கருக்கு கொடுத்தார். அது மட்டுமல்லாது அந்தக் காளையுடன் எப்போதும் இருக்கும் இளைஞர்களில் சிலர்தான் விஜயபாஸ்கர் வீட்டுக்குச் சென்று கொம்பனை பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டார்கள். மேலும் சில காளைகள் விஜயபாஸ்கர் இடத்தில் சேர்ந்து பிறகு அதனை பராமரிப்பதற்கும் புதிதாக இளைஞர்கள் சேர்ந்து கொண்டனர். அதனால் பராமரிப்பதற்கும் வாடி வாசலுக்குக் கொண்டு செல்வதற்கும் எளிதாக இருந்தன. மேலும் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டுக் காளைகளை மற்ற காளைகளைப் போல் லாரிகளில் ஏற்றிச் செல்ல மாட்டார்கள் ஏசி பொருத்தப்பட்ட கேரவன்களில் மட்டும் தான் கொண்டு செல்வார்கள்.
இந்த நிலையில் தான் கருப்புக் கொம்பன் காளை, வாடி வாசலில் நட்டு வைத்திருக்கும் மரத்தில் மோதி அந்த இடத்திலேயே இறந்து விட்டது. இது அவருக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. காரணம் என்னவென்றால் அவரது காளைகளை பராமரிக்கும் இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எல்லா காளைகள் இடத்திலும் அன்பாக பழகி காளைகளுடன் இணக்கமாக இருப்பார். காளைகளும் விஜயபாஸ்கர் இடத்தில் அன்பு காட்டும் குழந்தைகளைப் போல இருந்தன. வாடிவாசல் களத்தில் எவ்வளவு மூர்க்கம் காட்டினாலும் விஜயபாஸ்கர் இடத்தில் குழந்தைகளைப் போல அமைதியாகவும், அன்பாகவும் இருப்பதைக் காண முடியும். 2018 ஆம் ஆண்டு கொம்பன் காலை இறந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து வாங்கி வந்த காளைகளுக்கெல்லாம் சின்னக் கொம்பன், பெரிய கொம்பன், வெள்ளைக் கொம்பன் என்று பெயரிட்டு மகிழ்ந்து களத்தில் இறக்கினார்.
இந்த நிலையில் தான் வெள்ளை கொம்பன் என்ற காளை, வயது முதிர்வின் காரணமாக இறந்தது. இப்போது வாடிவாசல் தூணில் மோதி கருப்புக் கொம்பன் இறந்ததை எடுத்து மனிதர்களுக்கு செய்வது போலவே சடங்குகள் செய்து மாலையிட்டு, மஞ்சள் பூசி, பொட்டு வைத்து தனது தோட்டத்திலேயே புதைத்து தனது அஞ்சலியை செலுத்தி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
- ஷானு