கரூரில் வருமானவரித்துறை சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்காத, தி.மு.க துணை மேயர் வீட்டிற்கு ஐ.டி. அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆனால், மாட்டு வண்டியை கொண்டு வந்து அதிகாரிகளின் கார் முன்னே நிறுத்தி, அவர்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் தி.மு.க-வினர் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாநகராட்சி துணை மேயராக இருப்பவர் தாரணி சரவணன். இவர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர்.
இந்த நிலையில், நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நண்பர்கள், உறவினர்கள் மற்றும் டாஸ்மாக் - மின்துறை அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
இதில், கரூர் மாநகராட்சி துணை மேயராக இருப்பவர் தாரணி சரவணனின் வீடும் அடக்கம். இவரது வீடு கரூர் ராயனூர் பகுதியில் உள்ளது.
தாரணி சரவணன் வீட்டுக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளைச் சோதனை நடத்த அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், தாரணி சரவணனின் வீட்டிற்கு நள்ளிரவில் அதிகாரிகள் மீண்டும் சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவரது வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்தத் தகவல் அறிந்து திரண்டு வந்த தாரணி சரவணனின் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க-வினர் "சீல்" அகற்ற வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனங்களை வழிமறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அதிகாரிகளின் வாகனத்தின் குறுக்கே மாட்டு வண்டியை நிறுத்தி அதிகாரிகளை சிறைபிடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக, அடையாளம் தெரியாத தி.மு.க-வினர் 3 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.