தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நண்பர்கள், உறவினர்கள் மற்றும் டாஸ்மாக் - மின்துறை அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கரூரில் சோதனை நடத்திய அதிகாரிகள் கார் கண்ணாடி தி.மு.க-வினரால் உடைக்கப்பட்டது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அதாவது, கரூர், கோவை மற்றும் குளித்தலை ஆகிய 3 பகுதிகளில் சோதனை இன்று 2-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நேற்று வருமானவரித்துறை அதிகாரிகளைத் தி.மு.க-வினர் தாக்கியதாகப் புகார் எழுந்தது. அதே வேளையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாக தி.மு.க-வினர் 2 பேர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என்றும், சோதனைக்கு தி.மு.க-வினர் ஒத்துழைக்கவில்லை என்றும் புகார் எழுந்தது.
இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது பாதுகாப்புக்கு மாநில காவல்துறையைத் தவிர்த்து, இன்று சி.ஆர்.பி.எஃப். வீரர்களைத் தங்களது பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டனர். அவர்கள் உதவியோடு சோதனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கியதாக, அடையாளம் தெரியாத தி.மு.க-வினர் 3 பேர் மீது, கரூர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதேபோல, கரூரில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது, பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதாவது, கையால் தாக்கியது, தகாத வார்த்தையில் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.