'தேர்தல் நெருங்கும் போது, வருமானவரித்துறை மூலம் அனைவரையும் பா.ஜ.க. மிரட்டுகிறது' என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்போது, கரூரில் ஒரு சில இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளை சோதனை நடத்தவிடாமல் தி.மு.க-வினர் தகராறில் ஈடுபட்டனர்.
இது குறித்து, செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 'செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகளை சோதனை நடத்தவிடாமல் தி.மு.க-வினர் தடுத்து வருகின்றனர்.
தவறு செய்யவில்லை எனில் ஏன் பயப்படவேண்டும்? என்று கேள்வி எழுப்பியவர், எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினால் வருமான வரித்துறையினர்தான் பணம்தர வேண்டியிருக்கும் என்று நையாண்டியாக பதில் சொன்னார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இது போன்ற வருமான வரி சோதனை எல்லாம் நடந்தது. தேர்தல் நெருங்கும் போது பா.ஜ.க. ஐ.டி மூலம் அனைவரையும் மிரட்டுகிறது.
நாட்கள் நெருங்க நெருங்க அனைவரையும் மிரட்ட வேண்டியதுதான். ஐ.டி-சோதனை நிறைவின் போது எவ்வளவு ஆவணங்கள் எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடுவது இல்லை' என்றார்.