கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. மே 13 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க தோல்வியை தழுவியது. பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக, பா.ஜ.கவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.
ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியில் பா.ஜ.கவினர் செய்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், பா.ஜ.க முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா பேசுகையில், 'பசவராஜ் பொம்மை உள்பட பா.ஜ.க தலைவர்கள் பலர் பிட்காயினில் சட்டவிரோதமாக பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக, விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குழு ஏ.டி.ஜி.பி மணீஷ் கர்பிகர் தலைமையில் செயல்படும்' என்றார்.