'தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். அதேவேளையில், தொழிலும் வளர வேண்டும் - தொழிலாளர்களும் வாழ வேண்டும்' என்று, மே தின உரையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உழைப்பாளர் நாளான மே தினத்தையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், மேடையில் பேசினார். அப்போது, அவர் பேசுகையில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் முயற்சியால் தமிழ்நாட்டில் சென்னை கடற்கரையில் 1923-ம் ஆண்டு 'மே நாள்' முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. 1969-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தொழிலாளர் நலத்துறையை தனி அமைச்சகத்தையே உருவாக்கினார் என்று தி.மு.க அரசின் நலத்திட்டங்களை பட்டியல் போட்டார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் தென் மற்றும் வட மாவட்டங்களில் பெரும் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும், அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசால் ஒரு சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. இதற்கு அனைத்து தொழிற்சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது. அதிலும் குறிப்பாக, தி.மு.க தொழிற்சங்கமும் எதிர்ப்பு தெரிவித்ததுதான் வேடிக்கை. உடனே, அந்த சட்ட திருத்தத்தை திரும்பப் பெற்றுவிட்டோம்.
ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என ஒரு வருடத்திற்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் போராடினார்கள். அதில், பலர் உயிரையும் இழந்தனர்.
அதேபோல, தமிழகத்தில் கடந்த காலத்தில், எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்களைக் கொண்டு வந்து ஒரே இரவில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தவர்களையும் நாம் பார்த்துள்ளோம்.
இப்போது, கொண்டுவந்த சட்டத்திற்கு எதிர்ப்பு வந்த உடன், அதை உடனே நிறுத்திவைத்துவிட்டோம். ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனே திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான், அதை மறந்துவிடக்கூடாது. இவையெல்லாம் தெரிந்தும் சிலர் பாராட்ட மனமில்லாமல் தி.மு.க-விற்கு எதிராக பிரசாரம் செய்கின்றனர்.
எங்களைப் பொறுத்தவரை எந்த சூழ்நிலையிலும் தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். தொழிலும் வளர வேண்டும் - தொழிலாளர்களும் வாழ வேண்டும்' என்றார்.