‘இந்தியாவிற்கு தற்போது உள்ள பெயரே போதும்’- டாக்டர் ராமதாஸ் பேட்டி

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை எங்களுடைய கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

இந்தியாவிற்கு தற்போது உள்ள பெயரே போதும் என்பது என்னுடைய கருத்து என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் டாக்டர் ராமதாஸ் தனது 85வது பிறந்த நாளையொட்டி, 85 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். கர்நாடகா அரசு தற்போது தண்ணீர் தர மறுக்கிறது. தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ்கிறோம். சமூக நீதிதான் எல்லாவற்றிற்கும் சரியான பரிகாரம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்ற கேள்விக்கு, ”எங்களுடைய கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்” என்றார்.

தமிழக சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு, ”சட்டம் -ஒழுங்கு காப்பாற்றுவதற்கு தமிழக காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது” என்று கூறினார்.

பாரத் என்ற பெயர் மாற்றம் குறித்த கேள்விக்கு, ”தற்போது உள்ள இந்தியா பெயரே போதும் என்பது என்னுடைய கருத்து.தமிழக அரசின் இரண்டு ஆண்டு செயல்பாடு குறித்து தங்களது மதிப்பெண் என்ன என்ற கேள்விக்கு, மதிப்பெண்கள் போட்டு தருகிறேன்” என சிரித்து கொண்டே தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com