'வீட்டுக்கு சோதனைக்கு வரும் வருமானவரித்துறை அதிகாரிகள் ஏன் சுவர் ஏறி குதிக்கவேண்டும்?' என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சற்று முன்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'இன்று காலை முதல் எனது சகோதரர் அசோக் குமார் மற்றும் நண்பர்கள், உறவினர்களளுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சமூக ஊடங்களில் எனது வீட்டில் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால், அப்படி எந்த சோதனையும் எனது வீட்டில் நடைபெறவில்லை. அப்படியே, ஒரு வேளை சோதனை நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.
அங்கே நடைபெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களும், அது எதனால் ஏற்பட்டது என்பது குறித்தும், அண்ணன் ஆர்.எஸ். பாரதி தெளிவாக சொல்லிவிட்டார். அதைத்தாண்டி நான் சொல்ல ஒன்றும் இல்லை.
வருமானவரித்துறை சோதனை, முதல்முறை அல்ல, ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலின்போது, கடைசி நிமிடத்தில் வருமானவரித்துறை சோதனையை எதிர்கொண்டோம்.
தேர்தலின் இறுதி கட்டத்தின் போது, பிரச்சாரத்தில் இருந்தோம். அப்போது, பிரச்சாரத்தை முடக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்தன. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை நேரில் வரமுடியாது. வீட்டில் எனது அப்பா, அம்மா முன்னிலையில் சோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துவிட்டேன்.
இன்று சிறப்பு என்னவென்றால், வருமானவரித்துறை சோதனை நடத்தும் 40 இடங்களிலும், சம்பந்தப்பட்டவர்கள் முறையாக வரிசெலுத்தி வருபவர்கள்.
கரூரில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றதாக கேள்விப்பட்டவுடன், நான் உடனே கரூர்-க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். உடனே அவர்கள் கலைந்து சென்றுவிட்டார்கள்.
அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை கொடுக்க தயாராக உள்ளோம். சோதனை முழுமையாக நிறைவு பெறட்டும். அதன் பின்னர் நடந்த நிகழ்களை அப்படியே உங்களிடம் தெரிவிக்கிறேன்' என்றார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, 'எனது தம்பி ஊரில் இல்லை. ஆனால், குடும்பத்தினர் வீட்டில் உள்ளனர். அதிகாலை நேரம் என்பதால், வீட்டில் இருப்பவர்கள் எழுதிருக்க கொஞ்ச நேரம் ஆகும். முகம் கழுவிக் கொண்டு வரவேண்டாமா?
ஒரு 5 அல்லது 10 நிமிடம் அதிகாரிகள் காத்திருக்கலாம். ஆனால், வீட்டின் கதவை எட்டித் தாண்டி உள்ளே சென்றுள்ளார்கள். இது எதற்காக என தெரியவில்லை.
நான் கடந்த 26 வருடமாக பொது வாழ்க்கையில் உள்ளேன். எந்த சோதனையும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம். ஆனால், எங்கள் மீது குற்றச்சாட்டு சொல்லும் கட்சித் தலைவர்கள் வீட்டில் சோதனை நடைபெற்ற போது, வீட்டு முன்பு சாமியானா பந்தல் போட்டு, சாப்பாட்டு வாங்கிக் கொடுத்தார்கள். நாங்கள் அப்படியா செய்கிறோம்? என கேள்வி எழுப்பினார்.