புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை தி.மு.க, வி.சி.க., இடது சாரிகள், கங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பா.ம.க, த.மா.கா- வைச் சேர்ந்த எம்.பி-க்கள் பங்கேற்க உள்ளனர்.
தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்ட மத்தியஅரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
டெல்லியில் ரூ.970 கோடியில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28-ம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது.
இந்த கட்டடம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில், வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடையும்போது அதிகாரப் பரிமாற்றத்தைக் குறிப்பதற்காக வழங்கப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை தி.மு.க, வி.சி.க., இடது சாரிகள், கங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பு செய்துள்ளன. இந்த நிலையில், திறப்புவிழாவில் அ.தி.மு.க., பா.ம.க, த.மா.கா- வைச் சேர்ந்த எம்.பிக்கள் பங்கேற்க உள்ளனர்.
அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி-க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
அதபோல, மக்களவை எம்.பி ரவீந்திரநாத் குமார், மாநிலங்களவை எம்.பி. தர்மர் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
மேலும், பா.ம.க தலைவர் அன்புமணி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர்.