சீன லைட்டருக்கு கிடுக்குப்பிடி- கொண்டாட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சீன லைட்டருக்கு கிடுக்குப்பிடி- கொண்டாட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்

தீப்பெட்டி தொழிலை அழிவு பாதைக்கு வேகமாக நகர்த்தி வந்தது சீன லைட்டர். சீனாவின் தயாரிக்கப்படும் லைட்டர்கள் மிக குறைந்த விலையில் கிடைப்பது அதற்கு காரணம். எனவே, சீன லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சீன லைட்டரின் இறக்குமதிக்கான வரியை உயர்த்தி உள்ளது. இது தீப்பாட்டி உற்பத்தியாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. அவர்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

இது பற்றி தீப்பெட்டி உற்பத்தியாளர்களிடம் பேசினோம் "தமிழகத்தில் 50 முழு நேர தீப்பெட்டி ஆலைகளும், 300 பகுதி நேர தீப்பெட்டி ஆலைகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் ஆலைகளும் உள்ளன. இந்த ஆலைகளை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த ஆலைகள் பெரும்பாலும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகிய ஊர்களிலேயே உள்ளன.

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் உள்ளிட்டவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஒரு ரூபாயில் இருந்து 2 ரூபாயாக தீப்பெட்டி விலையை உயர்த்தினர். இது தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு ஓரளவு கைகொடுத்தது. தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. அதற்குக் காரணம் சீன நாட்டின் லைட்டர்கள்.

சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் லைட்டர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது தீப்பெட்டி உற்பத்தியை பெரும் அளவில் பாதித்துள்ளன. எனவே சீன லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான கடம்பூர் ராஜு, பா.ஜ.க மாநில துணைத்தலைவர் பேராசிரியர் சீனிவாசன் ஆகியோருக்கு கோரிக்கை வைத்தோம். அவர்கள் எங்கள் கோரிக்கையை மத்திய அரசுக்கு எடுத்துச் சென்றனர்.

எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு தற்போது சீன லைட்டர் இறக்குமதிக்கு ஆன வரியை உயர்த்தி இருக்கிறது. இது நிச்சயம் சீன லைட்டர்களின் இறக்குமதியை வெகுவாக குறைக்கும். எனவே இந்திய பிரதமர் மோடி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்றார்கள்.

-எஸ்.அண்ணாதுரை

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com