'அடங்கமாட்டேன்-வைகோவை விடமாட்டேன்' : அதிர்வேட்டு கிளப்பும் திருப்பூர் துரைசாமி

கட்சியின் அவைத்தலைவர் பதவி ஆடிட்டர் அர்ஜூனனுக்கு தந்துவிடும் முடிவில் இருக்கிறார் வைகோ
வைகோ
வைகோ

தமிழகத்தில் முன்பெல்லாம் எந்த மாவட்டத்தில் பிரச்னைகள் இருந்தாலும் அங்கே பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ம.தி.மு.க.வின் வைகோ நிற்பார். அதுதான் அவரது அடையாளமாக இருக்கும். ஆனால் இப்போதோ உட்கட்சி பிரச்னைகளால் மட்டுமே ம.தி.மு.க.வும், வைகோவும் இருப்பது வெளியே தெரிகிறது.

புரட்சிப் புயலாகவும், தியாக தலைவராகவும் அத்தனை கட்சியினராலும் கொண்டாடப்பட்ட மனிதர் இன்று ‘சுயநல சுனாமி. தொண்டர்களின் தியாகத்தை மதிக்காத தலைவர்!’ என்று சொந்த கட்சியினராலேயே மிக கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இதற்கு ஒரே காரணம், வாரிசு அரசியலை ஊக்குவித்ததுதான்.

தி.மு.க.வில் கருணாநிதியின் போர்வாளாக இருந்தவர் வைகோ. ஆனால், 'வைகோவால் ஸ்டாலினின் அரசியல் எதிர்காலும் பாதிக்கப்படும்' என்று நினைத்த காரணத்தினால், வைகோவை கருணாநிதி ஒதுக்கி வைக்க, வெடித்துக் கிளம்பிய வைகோ தனிக்கட்சியாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். முதலில், ஒரு அதிர்வை கிளப்பினாலும் கூட பிறகு தோல்விகளும், சறுக்கல்களுமே அவரது கட்சியின் ஜாதகமாகிப் போனது.

இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக தி.மு.க. கூட்டணியில் செட்டிலான வைகோ, தன் மகன் துரை வையாபுரியை மெது மெதுவாக கட்சிக்குள் கொண்டு வந்து, இப்போது அவரை உச்ச பதவியை நோக்கி உந்தி தள்ளும் நிலையில் மிக கடுமையான உட்கட்சி பஞ்சாயத்துகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக ம.தி.மு.க.வின் அவைத் தலைவரான திருப்பூர் துரைசாமி தொடர்ந்து வெளிப்படையாக வைகோவை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். தலைமையை சாடி, கேள்விகள் பல கேட்டு இதுவரையில் 6 கடிதங்களை எழுதியிருப்பவர் இப்போது அடுத்த கடிதத்தையும் பல கேள்விகளுடன் எழுதி தயார் செய்துவிட்டார்.

ம.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடந்து வரும் நிலையில் அதையும் விமர்சித்து இப்போது பேசி வருபவர் “கட்சியின் அவைத்தலைவர் பதவியை சீனியாரிட்டி அடிப்படையில் இல்லாமல் வேறு சில காரணங்களை அடிப்படையாக வைத்து ஆடிட்டர் அர்ஜூனனுக்கு தந்துவிடும் முடிவில் இருக்கிறார் வைகோ.

நியாயப்படி இந்த பதவியானது, கட்சி துவங்கிய காலத்தில் இருந்தே களப்பணியில் இருக்கும் மல்லை சத்யா, ஏ.கே.மணி இருவரில் ஒருவருக்குதான் தரப்பட வேண்டும். ஆனால் அர்ஜூனன், கட்சியின் கணக்கு விபரங்களை ஆடிட் செய்வதால் அவருக்கு வழங்கிட முடிவெடுத்துள்ளார்.

துரை வைகோவை விட அதிகாரம் மிக்க ஒருவர் பதவிக்கு வந்துவிட கூடாது என்பதற்காக கட்சி துவங்கிய காலத்தில் இருந்து கட்சியில் உழைப்போரை ஓரங்கட்டுகிறார்” என்று வெளுத்து வாங்கியுள்ளார்.

நாம் துரைசாமியிடம் பேசியபோது “மதிமுகவினுள் கலகம் விளைவிக்கும் எண்ணம் எனக்கில்லை. எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கம் துவக்கப்பட்டதோ அதை தனது சுயநலனுக்காக, தன் மகனுக்காக சிதைக்கிறார் வைகோ.

எத்தனையோ தொண்டர்களின் உயிர் மற்றும் உழைப்பு தியாகத்தினால் எழுந்து நிற்கும் இயக்கத்தை இவரது சுயநலனுக்காக அழித்திட அனுமதிக்க முடியாது. தன் மகனை கட்சியின் முதன்மை செயலர் ஆக்குவதுதான் வைகோவின் லட்சியம்.

உட்கட்சி நியாயத்தையும், ஜனநாயகத்தையும் உரக்க பேசுவதால் நான் இன்று தப்பானவனாகிப் போனேன். ஆனாலும் கவலையில்லை, என் குரல் தொடருமே தவிர அதை அடக்கிக் கொள்ள மாட்டேன்.” என்கிறார்.

- ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com