தற்போது, கேப்டன் விஜயகாந்த் நன்றாக உள்ளார். தேவையான நேரத்தில் தொண்டர்களை கட்டாயம் அவர் சந்திப்பார் என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் கோவைக்கு வருகை தந்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறுகையில், தேர்தலுக்கு முன்பு அனைத்து மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றது.
தற்போது, தகுதியான பெண்களுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. கண்டனத்திற்குரியது.
அனைத்து மாவட்டங்களிலும் தே.மு.தி.கவின் உட்கட்சி தேர்தல் நிறைவடைந்துவிட்டது. இதற்கு அடுத்து செயற்குழு, பொதுக்குழுவை தலைமைக் கழகம் விரைவில் அறிவிக்கும். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து உள்ளேன்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என இப்போது சொல்ல முடியாது. தேர்தல் வரும்போது யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்படும்.
அந்த முடிவை தலைவர் உரிய முறையில் கேப்டன் விஜயகாந்த் அறிவிப்பார். தற்போது, கேப்டன் விஜயகாந்த் நன்றாக உள்ளார். தேவையான நேரத்தில் தொண்டர்களை கட்டாயம் அவர் சந்திப்பார்.
மதுரையில் திமுக அரசு நூலகம் திறப்பது நல்ல விஷயம், அது ஒரு அறிவு சார்ந்த விஷயம் என்பதால் வரவேற்கிறோம். இதுபோல் அனைத்து ஊர்களில் திறக்கலாம் என்றார்.