ஓசூர்: விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ்- முடிவுக்கு வந்த 166வது நாள் காத்திருப்பு போராட்டம்

நம்பிக்கையின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்திருந்தார்.
காத்திருப்பு போராட்டம்
காத்திருப்பு போராட்டம்

ஓசூர் அருகே விளைநிலங்களில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 166 நாட்களாக விவசாயிகள் நடத்திய காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் 166வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒசூர் எம்.எல்.ஏ-வும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான பிரகாஷ் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். அப்போது விளைநிலங்களில் சிப்காட் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை விவசாயிகளுக்கு அளித்தார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு இருப்பதால் விருப்பம் உள்ளவர்களை தவிற மற்றவர்களின் விளை நிலங்களை கைப்பற்ற மாட்டோம் என்பதால் நம்பிக்கையின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், 166வது நாளுடன் விவசாயிகள் எம்.எல்.ஏ-வின் கோரிக்கையை ஏற்று காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில் இன்று ஓசூர் எம்.எல்.ஏ பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் நேரடியாக விவசாயிகளை சந்தித்து பழச்சாறு வழங்கி போராட்டத்தை நிறைவு செய்து வைத்தனர்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஓசூர் எம்.எல்.ஏ பிரகாஷ், ‘’விவசாயிகளை பாதிக்கும் வகையில் தமிழக அரசு திட்டங்களை மேற்கொள்ளாமல் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்கிற உத்தரவாதத்தை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்று விவசாயிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும்’’என உறுதியளித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com