மருத்துவமனை திறப்பு விழா: ஸ்டாலின் புகாருக்கு குடியரசு தலைவர் அலுவலகம் விளக்கம்

மருத்துவமனையின் திறப்பு விழாவிற்கு வரவிடாமல் குடியரசு தலைவரை தடுத்துவிட்டனர் என ஸ்டாலின் புகார்
மருத்துவமனை திறப்பு விழா
மருத்துவமனை திறப்பு விழா

'குடியரசு தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதால், சென்னையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை' என குடியரசு தலைவர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை, கிண்டியில் தமிழக அரசால் கட்டிமுடிக்கப்பட்ட கலைஞர் பல்நோக்கு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்த விழா முதலில் ஜூன் 3 -ம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்தநாளில் நடைபெறும் என்றும், குடியரசு தலைவர் முர்மு திறந்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், குடியரசு தலைவர் வருகைக்காக ஜூன் 15 -ம் தேதிக்கு விழா தேதி மாற்றப்பட்டது. ஆனாலும், கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர், ஏழை, எளிய மக்களின் மருத்துவராக இருந்தவர் கருணாநிதி. இந்த மருத்துவமனையின் திறப்பு விழாவிற்கு வரவிடாமல் குடியரசு தலைவரை தடுத்துவிட்டனர். மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்றார். இதனால், இந்த விவகாரம் அரசியலானது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து குடியரசு தலைவர் குடியரசு தலைவர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை குடியரசு தலைவர் திறந்து வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

ஆனால், அழைப்பு விடுப்பதற்கு முன்னரே குடியரசு தலைவர் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் இறுதி செய்யப்பட்டுவிட்ட காரணத்தால் சென்னை மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com