என்.எல்.சி ரூ.40,000 இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு - என்ன காரணம்?

சிறப்பு தாசில்தாரரிடம் இழப்பீட்டு தொகையை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகஸ்ட் 6 -ம் தேதிக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

என்.எல்.சி.க்காக கையகப்படுத்திய நிலத்தில் பரவனாறு ஆற்றை அணுகும் வகையில் கால்வாய் தோண்டும் பணியின் போது, புல்டோசர்களை விட்டு பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறி, அறுவடை வரை விவசாயிகளை தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவிடக் கோரியும்,

நிலத்தை மீண்டும் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் தாக்கல் செய்திருந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நேற்று முன் தினம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கான இழப்பீடு குறித்து தமிழக அரசும், என்.எல்.சி. தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யும் வரை தொந்தரவு செய்யப் போவதில்லை என தெரிவித்தார்.

செப்டம்பர் 15 -ம் தேதிக்குள் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும், சேதப்படுத்தப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

என்.எல்.சி. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், நெற்பயிர் சேதப்படுத்தப்பட்டதால் 88 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 53 பேருக்கான இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். இதனால், சிறப்பு தாசில்தாரரிடம் இழப்பீட்டு தொகையை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, நிலம் கையகப்படுத்தும்போது வழங்குவதாக கூறிய இழப்பீடான ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாயை முழுமையாக வழங்காமல் பயிர்களை சேதம் செய்துள்ளதாகவும், தற்போது சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இழப்பீடு போதுமானதல்ல எனவும், ஒரு மூட்டைக்கு 1,350 ரூபாய் என வைத்தால், ஏக்கருக்கு 81 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் முன்னாள் உரிமையாளர்களான விவசாயிகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதால் தொடர்ந்து அந்த நிலத்தில் விவசாயம் செய்தது அத்துமீறல் எனக் குறிப்பிட்டார்.

அதேபோல, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பாதுகாக்காமல் இத்தனை ஆண்டுகள் விவசாயம் செய்ய அனுமதித்து என்.எல்.சி. நிர்வாகமும் தவறி விட்டதாகவும் தெரிவித்தார். பின்னர், நீதிபதி, இருவருக்கும் சமபங்கு பொறுப்பு உள்ளதால், சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அரசுக்கும், என்.எல்.சி.-க்கும் உத்தரவிட்டார்.

இத்தொகையை ஆகஸ்ட் 6 -ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும், செப்டம்பர் 15 -ம் தேதிக்கு பின் நிலத்தில் எந்த விவசாய பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டார் நீதிபதி.

மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்.எல்.சி. பாதுகாக்க வேண்டும் என்றும், நிலத்தின் முன்னாள் உரிமையாளர்கள் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தினால் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என உத்தரவிட்டு, கூடுதல் இழப்பீடு தொடர்பான கோரிக்கை குறித்து முடிவெடுப்பதற்காக வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7 -ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com