திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் தரமற்றிருப்பதாகவும், சில இடங்களில் அரைகுறையாக சாலைப்பணி நிறைவுற்று இருப்பதாகவும் அப்பகுதியினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர் 23வது வார்டு பகுதியில் உள்ள கரட்டு மலை பின்புறம் குடியிருப்பு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நகராட்சியின் மூலமாக பேவர் ப்ளாக் கல் கொண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்த சாலைப்பணி தற்போது வரை முழுமை பெறாமல் அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த சாலையில் பயணிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி விபத்தில் சிக்கி கீழே விழுந்து எழுந்துபோய் வருகின்றனர்.
பேவர் கல் மூலமாக போடப்பட்ட சாலை முழுமை பெறாததால் சாலையின் இருபுறமும் பக்கவாட்டு சிமெண்ட் கட்டை அமைக்கப்படாமல் அதில் போடப்பட்டுள்ள அரளை கற்கள் வெளியே தெரிகிறது.
இதனால் இருசக்கர வாகனத்தில் பயணிப்போரின் வாகனமும், பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அந்த பகுதியில் இருபுறமும் திருப்பங்கள் உள்ளதால் வாகனம் சறுக்கி கீழே விழும் நிலை தொடர்கிறது.
இரவு நேரங்களில் இந்த சாலையில் பயணிப்பதற்கு அச்சமாகவே இருக்கின்றது. கற்கள் தனித்தனியாக பெயர்ந்து வெளியே தெரிவதால் பெரும் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன என்கின்றனர் வேதனையுடன்.
இதுகுறித்து துறையூர் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அவசரகதியில் போடப்பட்ட சாலையை உடனடியாக சரி செய்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என துறையூர் நகராட்சியை கரட்டுமலை பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- ஷானு