தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் மூன்று உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு. இந்தியாவின் முன்மாதிரி சிறைச்சாலையாக புதுச்சேரி சிறைச்சாலை மாறி வருகிறது.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறை விசாரணை, தண்டனை கைதிகள் என 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகிறது. அதோடு ஒவியம், சிற்பம் உள்ளிட்ட நுண்கலைப் பயிற்சியும், உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு பயிற்சியும், நடன பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
சிறை வளாகத்தில் அமைந்துள்ள 36 ஏக்கரில் 5 ஏக்கர் நிலப்பரப்பு கைதிகளால் சமன்படுத்தப்பட்டு துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை உள்ளிட்வை அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்துகொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறைச்சாலை வளாகத்தின் ஒரு பகுதியில் 147 வகையான மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் அடங்கிய சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. கைதிகள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் வகையில் குறைந்த அலைவரிசையில் வானொலியும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது கைதிகள் உள்ளிட்டோருக்கான 3 உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நடைபெற்றது. சிறை கண்காணிப்பாளர் பாஸ்கர் வரவேற்றார். சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் வாழ்த்திப் பேசினார். ஆரோவில் அறக்கட்டளைச் செயலர் ஜெயந்திரவி மற்றும் எஸ்.பி.ஐ எம்.எப் மூத்த அதிகாரி வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொடு உடற்பயிற்சி கூடங்களை திறந்து வைத்தனர். இதில் அரவிந்தோ சொசைட்டி நிர்வாகிகள், சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கர் கூறும்போது, ‘‘கைதிகளின் மறுவாழ்வுக்காக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பண்ணை உருவாக்கியுள்ளோம். மேலும் மாடு, ஆடுகள், கோழி, முயல் உள்ளிட்டவைகளும் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்களின் மனநிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதன்படியே தற்போது கைதிகள் பயிற்சி பெறும் வகையில் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கைதிகளுக்கு மனரீதியிலான நிறைய மாற்றங்கள் வரும். அதோடு உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சி பெறும் கைதிகள் விடுதலையாகிச் சென்றதும், உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சியாளர்களாகச் சேர்ந்து வருவாய் ஈட்டலாம். அந்த நோக்கில்தான் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சிறையில் ஏற்படுத்தப்படும் நலத்தட்டங்களுக்கு ஸ்ரீஅரவிந்தர் அறக்கட்டளை உதவிபுரிகிறது’’என்றார்.