'இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் தி.மு.க அரசு' - சீமான் குற்றச்சாட்டு
அரசுத்துறைகளில் மூன்றரை இலட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் ஆண்டொன்றுக்கு வெறும் 10,000 பணியிடங்கள் மட்டுமே குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பும் திமுக அரசு நிரப்பி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் மூன்றரை இலட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது.
இதனால் அதிக காலிப்பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டாண்டு கொரோனா இடைவெளிக்குப் பிறகு 2022 -ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெறும் 10,000 பணியிடங்களுக்கு மட்டுமே ஆட்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது தி.மு.க அரசு.
அத்தேர்வு முடிவையும் 8 மாதங்கள் தாமதித்து வெளியிட்டுப் பெருங்கொடுமை புரிந்தது தி.மு.க அரசு. இதனால் இராப்பகலாக கண்துஞ்சாது படித்து, அயராது முயன்ற எனது அன்புத் தம்பி தங்கைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத்துறைகளில் ஏறத்தாழ 3.5 இலட்சம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் ஆண்டுக்கு 10,000 என்றால் எஞ்சியுள்ள 3 ஆண்டுகளில் தி.மு.க அரசால் வெறும் 30,000 பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடியும். எனில், தேர்தலின் போது தி.மு.க அளித்த இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப்போகிறது?
கடந்த இரண்டு ஆண்டுகளில் தி.மு.க அரசால் நிரப்பப்பட்ட காலி பணியிடங்களை விட, ஓய்வு பெறுவதினால் உருவான காலி பணியிடங்கள் மிக அதிகம். அரசுத் துறைகள் சிறப்பாகச் செயல்பட ஊழியர் பற்றாக்குறையைப் போக்கி காலி பணியிடங்களே இல்லை என்ற சூழலை தி.மு.க அரசு எப்போது உருவாக்கப்போகிறது?
அதுமட்டுமன்றி, ஓய்வுபெறும் வயதை 60 ஆக அதிகரித்தும், காலிப் பணியிடங்களுக்கு நிரந்தரப் பணியாளர்களுக்கு மாற்றாக, தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியாளர்களை நியமித்தும் அவர்களின் உழைப்பினை உறிஞ்சுவது கொடுங்கோன்மையாகும்.
காலியாக உள்ள அரசுப்பணியிடங்களை நிரப்பாமல் அரசு இயந்திரத்தை முடக்கி மக்கள் சேவையினைத் தாமதப்படுத்துவோடு, அரசு வேலைக்காக அயராது முயற்சித்துக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடும் தி.மு.க அரசு விளையாடுவது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.
ஆகவே, பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3.5 இலட்சம் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பவும், போட்டித்தேர்வுக்கு முயற்சிக்கும் இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றவும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30,000 பணியிடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்த அரசாணை வெளியிட வேண்டுமெனவும், அரசுப்பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 58 ஆகக் குறைக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.