'தமிழக ஆளுநர் ரவி பா.ஜ.கவின் ஏஜென்டாக செயல்படுகிறார்' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க வழக்கறிஞர் இளங்கோ ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, 'அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு இருப்பதால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மோ மாதம் 31 -ம் தேதி அன்று ஆளுநர் ரவி, தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அந்த கடிதத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் மறுநாளே பதில் கடிதம் எழுதி இருந்தார். அதில், வழக்கு இருக்கும் என்ற ஒரே காரணத்திற்காக செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு வேளை நீங்கள் சொல்வதுபோல், அப்படி இருக்குமானால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது வழக்கு நிலுவையில் இருக்கிறது. அமித்ஷா பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இன்று பா.ஜ.கவில் 78 மத்திய அமைச்சர்கள் உள்ளனர். இதில், 33 பேர் மீது இன்றும் வழக்கு நிலுவையில் உள்ளது என ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத் துறையை தங்கம் தென்னரசுவிற்கும், மதுவிலக்குத் துறையை முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்க வேண்டும் என ஆளுநருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதி இருந்தார்.
அமைச்சரவை மாற்றம் செய்யும் போது ஆளுநரை கேட்டு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும், அமைச்சரவையை மாற்றியுள்ளோம் என ஆளுநருக்கு தெரிவிக்கவேண்டும். அதனால், அமைச்சரவை மாற்றத்தை ஆளுநருக்கு முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் பொறுப்பில் இருந்த இரண்டு துறைகளையும், இரண்டு அமைச்சர்களுக்கு மாற்றியுள்ளோம் என கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால், ஆளுநர் மீண்டும் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், நீங்கள் சொல்லும் காரணம் தவறாக வழி நடத்துவதாக உள்ளது. சரியான தகவல்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதனால், முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசித்து சில விதிகளை சுட்டிக்காட்டி மீண்டும் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
இதன் மூலம், தமிழக ஆளுநர் ரவி பா.ஜ.கவின் ஏஜென்டாக செயல்படுகிறார் என்பது தெரிய வருகிறது' என்று குற்றம் சாட்டினார்.