'செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழக ஆளுநர் ரவி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்' என தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் ரகுபதி, தி.மு.க. எம்.பி. வில்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக ஆளுநர் ரவி விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.
செந்தில் பாலாஜி மீதான வழக்கை நியாயமாக விசாரிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால், செந்தில் பாலாஜியை தனிமைப்படுத்தி குற்றம் சாட்டுவதற்கான அவசியம் என்ன? நோக்கம் என்ன?
குற்றம் சாட்டப்பட்டதாலே செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய முடியாது. செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.
அமைச்சரவை விவகாரத்தை பொறுத்தவரை ஆளுநர் என்பவர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆளுநர் அதிகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அமைச்சர்கள் பலர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படி வழக்கு உள்ள மத்திய அமைச்சர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளார்களா?
எந்த ஒரு பிரச்சனைகளையும் தி.மு.க அரசு சட்ட ரீதியில் எதிர்கொள்ள தயக்கம் காட்டியது இல்லை. அவசர கதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துள்ள முடிவை, தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்கிறது.
ஆளுநர் விவகாரத்தில், முதல்வருக்கு அரசியல் அமைப்பு சட்டம் அளித்த உரிமையை ஆளுநர் மீறி உள்ளார். உச்ச நீதிமன்றம் இது குறித்து தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது' என்றார்.