முன்னாள் முதல்வர் காமராஜர் பயன்படுத்திய கார்- 71 ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி இருக்கிறது?

'’கார் கண்ணாடி, ரப்பர் உதிரி பாகங்கள், லைட்டுகள் அமெரிக்காவில் ஆர்டர் செய்து வரவழைத்தோம்’’
காமராஜர் பயன்படுத்திய கார்
காமராஜர் பயன்படுத்திய கார்

முன்னாள் முதல்வர் காமராஜர் பயன்படுத்திய கார், கிருஷ்ணகிரி மெக்கானிக் ஷெட்டில் புனரமைக்கப்பட்டது புதுப்பொழிவுடன் காணப்படுகிறது.

முன்னாள் முதல்வர் காமராஜர், எம்.டி.டி.,2727 என்ற எண் கொண்ட, 1952ல் அறிமுகப்படுத்தப்பட்ட செவலர்ட் ஸ்டைல்டைன் டீலக்ஸ் கருப்பு நிற காரைப் பயன்படுத்தி வந்தார். இதை, தொழிலதிபர் டி.வி.சுந்தரம் அப்போது தமிழ்நாடு காங்., தலைவராக இருந்த காமராஜருக்கு வழங்கினார். பின்னாளில் காமராஜர் முதல்வரான பின்னும் இந்த காரையே பயன்படுத்தி வந்தார். காமராஜர் மறைவுக்குப்பின், சென்னை காமராஜர் அரங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த கார், கிருஷ்ணகிரியில் உள்ள டார்க் மேக்ஸ் என்ற கார் மெக்கானிக் ஷெட்டில் புணரமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டது.

இது குறித்து கார் ஷெட் உரிமையாளர் அஷ்வின் ராஜ் வர்மா கூறியதாவது: ’’என் தாத்தா முனுசாமி கவுண்டர் காமராஜர் காலத்தில் கிருஷ்ணகிரியில் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். என் தந்தை ராஜேந்திர வர்மா தனியார் பஸ்கள் வைத்து தொழில் நடத்துகிறார். நான் கிருஷ்ணகிரியில் கார்ஷெட் வைத்துள்ளேன். நாங்கள் பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தினர் என்ற அடிப்படையில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி என்னிடம், காமராஜரின் காரை புதுப்பித்து தருமாறு கேட்டார். அதன்படி கடந்த, ஜூன், 1ல், காரை சென்னை காமராஜர் அரங்கத்திலிருந்து எடுத்து வந்து கிருஷ்ணகிரியில் புதுப்பொலிவுடன் தயார் செய்துள்ளோம். கார் கண்ணாடி, ரப்பர் உதிரி பாகங்கள், லைட்டுகள் அமெரிக்காவில் ஆர்டர் செய்து வரவழைத்தோம்.

அதேபோல சில்வர் பாகங்களை ஜோத்பூர் அரண்மனையில் பழைய கார்களை புனரமைக்கும் நிபுணர் அர்ஜூன் தலைமையிலான குழுவினரால் புதுப்பித்தோம். புதுப்பொலிவுடன் உள்ள காரை தற்போது பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வந்து கார் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர். வரும், 15ம் தேதி, காமராஜர் பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் அரங்கத்திற்கு கார் திரும்ப அனுப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி காங்., எம்.பி., செல்லகுமார் கொடியசைத்து வியாழக்கிழமை துவக்கி வைக்கிறார்’’என்றார்.

- பொய்கை. கோ.கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com