கோவைக்கே முதலிடம்: ’கல்லா கட்டும் அதிகாரிகளுக்கு ஆப்பு வையுங்க’- ஆட்சியரிடம் குவியும் கோரிக்கைகள்

மேற்கு மண்டலம் என்று அழைக்கப்படும் கொங்கு மண்டலத்தில் கனிமவள கொள்ளை உச்சம் தொட்டு நிற்கிறது.

கோவைக்கே முதலிடம்: ’கல்லா கட்டும் அதிகாரிகளுக்கு ஆப்பு வையுங்க’- ஆட்சியரிடம் குவியும் கோரிக்கைகள்
rrr

’உடனடியா தடுத்து நிறுத்துங்க முதல்வரே’என்று தமிழக அரசை எதிர்க்கட்சிகளும், சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்தும் விவகாரம் ‘கனிம வள கொள்ளை’தான்.

தமிழகத்தில் எங்கெல்லாம் பாறைக்குழிகள், ஆற்று மணல்கள் உள்ளனவோ அங்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு நடக்கிறது கனிமவளக் கொள்ளை.

அதிலும் மேற்கு மண்டலம் என்று அழைக்கப்படும் கொங்கு மண்டலத்தில் கனிமவள கொள்ளை உச்சம் தொட்டு நிற்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் கல் குவாரிகளில் இருந்து தினமும் பல நூறு லாரிகளில் பல்லாயிரம் டன் கற்கள் அனுமதியின்றியும், அனுமதித்த அளவை தாண்டியும் கொள்ளை போய்க் கொண்டே இருக்கின்றன. இந்த விவகாரம் குறித்து நமது குமுதம் டிஜிட்டல் தளம் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு அலர்ட் செய்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் திருப்பூரில் கனிமவள கொள்ளைக்கு பச்சைக்கொடி காட்டிய உதவி இயக்குநர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது போல் கோவையிலும் அதிரடி தேவை என்று விவசாய அமைப்பினர் மற்றும் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை குரலை எழுப்பியுள்ளனர்.

அதாவது, திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநராக இருந்தவர் வள்ளல். தமிழக அமைச்சரவையின் மூத்த மற்றும் முக்கியமான அமைச்சர் ஒருவரின் ஆசீர்வாதம் இருப்பதால் தன் துறையில் ஓவராக ஆட்டம் போட்டார் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த வினீத்துக்கு புகார்கள் பறந்தன. அனுமதித்த அளவை தாண்டியும், அனுமதியின்றியும் பாறைகள் வெட்டிக் கடத்தப்பட்ட போது விவசாய சங்கங்கள் கடும் குரல் கிளப்பின. கனிமவளத்துறை அலுவலகம் சென்று புகார்கள் கொடுத்தனர். ஆனால், அவற்றின் மீது எந்த நடவடிக்கையுமில்லை. இதனால், மறு முறை புகார் கொடுக்க சென்றுவிட்டு, மனுவை அங்கேயே கிழித்துப் போட்டுவிட்டு வந்தனர் விவசாயிகள்.

விவகாரம் இந்தளவுக்கு வெடித்த நிலையில், ஆட்சியர் வினீத்தின் கவனத்துக்கு புகார் சென்றது. அவர் கனிமவளத்துறை அலுவலகத்தை நேரடி ஆய்வு செய்தார். அப்போது அந்த அலுவலகத்தில், குவாரி பற்றிய விவகாரங்களை டீல் செய்வதற்காக சம்பந்தமே இல்லாத ஒரு பெண் நிரந்தரமாக அமர்த்தி வைக்கப்பட்டிருந்த தகவலும் கலெக்டருக்கு கிடைத்தது. இதனால், பல ஆவணங்கள், புகார்களின் அடிப்படையில் வள்ளலை அழைத்து விசாரித்துள்ளார். அதன் பின் திருப்பூர் மாவட்டத்தின் காங்கயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி நடத்தப்பட்ட குவாரிகளில் ஆய்வு நடத்தி, சில கோடிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இவ்வளவு விவகாரம் நடந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் திருப்பூர் கலெக்டரை சென்னையின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு மாற்றிவிட்டது அரசு. ஆனால், அப்போதும் அசராத ஆட்சியர், வள்ளலை கனிமவளத்துறை உதவி இயக்குநர் பதவியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார். இந்த அதிரடியை வள்ளல் மட்டுமல்ல, மேற்படி மூத்த அமைச்சரும் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு புறமிருக்க, திருப்பூரை போல் கோவை மாவட்டத்திலும் கனிமவள கொள்ளையை கண்டும் காணாமல் இருந்து பெருத்த கல்லா கட்டும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆட்சியரை வலியுறுத்தி விவசாய சங்கங்களும், சூழலியல் அமைப்புகளும் குரல் கொடுக்க துவங்கியுள்ளன.

ஏனென்றால், தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை மிக மிக அதிகம் நடக்கும் மாவட்டங்களில் கோவைக்குத்தான் முதலிடம் என்பதே.

-ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com