நெய்வேலி: அன்புமணி கைது - போலீஸ் வாகனம் மீது தாக்குதல் - பெரும் கலவரம்

நெய்வேலியில் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
போராட்டத்தில் தாக்கப்பட்ட போலீசார்
போராட்டத்தில் தாக்கப்பட்ட போலீசார்

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய 12,000 ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்பட என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நெய்வேலி அருகே உள்ள சேத்தியாதோப்பு, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கத்தாழை கிராமங்களிலும் பொதுமக்கள், நிலம் கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகம் தீவிரம் காட்டியது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டும் இதனை பொருட்படுத்தாமல் மேல்வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டது. என்.எல்.சி. நிர்வாகத்தின் இந்தப் போக்கை கண்டித்து பாமக போராட்டம் அறிவித்தது.

எத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும், வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப் படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது.

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது அன்புமணி ராமதாஸ் உறுதிபட தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனே தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும், என்.எல்.சி. நிறுவனம் உடனே வெளியேற வேண்டும் என்றும், இன்று நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். நெய்வேலியில் இன்று பிரம்மாண்ட கண்டனப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று என்.எல்.சி.க்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இதனிடையே, போராட்டத்தில் கலந்து கொண்ட பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

அன்புமணி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெய்வேலியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் பாமகவினர் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது, என்.எல்.சி 2-வது நுழைவுவாயில் உள்ளே செல்ல பாமகவினர் முயன்றனர். இதனால், காவலர்களின் அறிவுறுத்தலை மீறி 2 -வது நுழைவுவாயில் அருகே நின்றிருந்த பாமகவினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதில், பாமகவினர் போலீசார் மீது கால்வீசி தாக்கினர். இதில், போலீசார் மற்றும் செய்தி சேகரித்துக் கொண்டு இருந்த பத்திரிக்கையாளர்கள் படுகாயமடைந்தனர்.

ஆனாலும், போலீஸ் வாகனத்தின் கண்ணாடிகளை பாமகவினர் அடித்து உடைத்தனர். இதனால், நெய்வேலி போர்க்களமாக காட்சி தருகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com