"படிப்பு மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து" - மு.க.ஸ்டாலின் பேச்சு

நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன் படித்த பல்கலைக்கழகம் இது என புகழாராம்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிவ்ல குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மாணவ, மாணவிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்டமும், பதக்கமும் வழங்கி கவுரவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், சென்னைப் பல்கலைக்கழகம் பாலின சமத்துவத்தின் அடையாளமாக திகழ்கிறது என்றும் கல்வியை மேம்படுத்துவதில், இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறது என்றும் புகழாராம் சூட்டினார்.

மேலும், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்களான ஏபிஜே அப்துல்கலாம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, கே.ஆர்.நாராயணன் போன்ற மேதைகள் இந்த பாரம்பரியமிக்க பல்கலைக்கழகத்தில் படித்தவர்களே. இத்தகைய தலைவர்களை எல்லாம் உருவாக்கிய இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

இதனைத்தொடர்ந்து, யாரும் எதிர்பாரத வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியா மறுமலர்ச்சி அடையும் தருணத்தில் நீங்கள் பட்டம் பெறுவது உங்கள் அதிர்ஷ்டம். வாழ்க தமிழ், வாழ்க பாரதம் என்று பேசி அசத்தினார்.

பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையை சென்னை பல்கலைக்கழகத்திற்கு யுஜிசி வழங்கியுள்ளது.

நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன் படித்த பல்கலைக்கழகம் இது. அதுமட்டுமல்ல, மிகப்பெரும் அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி உள்ளிட்டோர் இங்குதான் படித்தவர்கள்.

ஏன், இன்னும் சொல்லப்போனால், உங்கள் முன் உரையாற்றும் அடியேனும் இதே பல்கலைக்கழகத்தில் படித்தவன்தான். அந்த வகையில் உங்கள் சீனியராக இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டுள்ளேன். எனவே, மாணவர்கள் தகுதியான வேலை கிடைத்தவிட்டால், படிப்பதை நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து படிக்க வேண்டும். படிப்பு மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com