'எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும்’- அ.தி.மு.க., எம்.பி தம்பிதுரை

அ.தி.மு.க நாடு முழுவதும் பரவ வேண்டும். ஒரு தமிழன் இந்தியாவை ஆளுகின்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பெயர் வைத்தார் எம்.ஜி.ஆர்.
எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

’’தமிழர் பாரத பிரதமராக ஆக வேண்டும் என அமித்ஷாவின் கருத்தை வரவேற்கிறோம். அந்த எண்ணத்தை செயல்படுத்தக்கூடிய இடத்தில் தற்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும்’’என அ.தி.மு.க., எம்.பி.தம்பிதுரை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் நடந்த தனியார் கல்வி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட ராஜ்யசபா உறுப்பினரும், அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’தமிழகத்தை சேர்ந்தவர் தான் பிரதமராக வரவேண்டும் என அமித்ஷா பேசியது தமிழகத்திற்கு வரவேண்டிய பெருமை. கடந்த காலத்தில் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு ராஜாஜி, காமராஜர், மூப்பனார் ஆகியோருக்கு கிடைக்க வேண்டியது தள்ளிப்போனது. அதற்குக் காரணம் தி.மு.க என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

தம்பிதுரை
தம்பிதுரை

அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என நிறுவனர் எம்.ஜி.ஆர் பெயர் வைத்தார். அ.தி.மு.க நாடு முழுவதும் பரவ வேண்டும். ஒரு தமிழன் இந்தியாவை ஆளுகின்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பெயர் வைத்தார் எம்.ஜி.ஆர். அதற்கு ஏற்ப மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் வாய்ப்பு வந்தது. காலத்தின் கட்டாயத்தால் அவை மாறிவிட்டது.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்து வருகிறோம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமராக வர மாட்டார்களா என்கிற எண்ணம் மக்களிடம் உள்ளது. உலக அளவில் மாபெரும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மோடி என அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி தான் தேர்தலை சந்திக்கும். 40 தொகுதிகளில் வெற்றி பெறுவது அ.தி.மு.க-வின் கூறிக்கோள்.

தமிழர் பாரத பிரதமராக வேண்டும் என அமித்ஷா கருத்தை வரவேற்கிறோம். நன்றி தெரிவிக்கிறோம். அமித்ஷா தெரிவித்த வார்த்தையை செயல்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மோடி என சொல்லிவிட்டார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எப்போது பிரதமராக வருவார் என தெரியவில்லை. அப்படி வரும் பட்சத்தில் அ.தி.மு.க எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த எண்ணத்தை செயல்படுத்தக்கூடிய இடத்தில் தற்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும். எடப்பாடி பழனிச்சாமி எளிமையானவர். விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். ஜெயலலிதா ஆசி பெற்றவர். ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் ஆக அனைத்து தகுதிகளும் உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்த தி.மு.க ஏன் தடுக்கவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினை கேட்கிறேன். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தி.மு.க 5 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தது. அப்போது மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன வந்தது என பட்டியலிடட்டும். மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வு மத்திய அரசு முழுவதும் நடத்த உள்ளது. தொடர்பான கேள்விக்கு மத்திய அரசின் இது போன்ற செயல்பாடுகளுக்கு அடிப்படை காரணம் தி.மு.க தான். 1976 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் கல்வித்துறையை மாநில பட்டியலில் இருந்தது மத்திய பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றது மறைந்த முன்னாள் இந்திரா காந்தி அவர்கள் தான்.

அமித் ஷா
அமித் ஷா

அதற்குப்பின் தி.மு.க மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தது. மத்திய பட்டியலில் இருந்த கல்வித்துறையை மாநில பட்டியலுக்கு கொண்டுவர தி.மு.க முயற்சி செய்தார்களா? அப்படி செய்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது. மாநில சுயாட்சி என ஸ்டாலின் பேசுவது கண் துடைப்பு. கல்வித்துறையின் எல்லா அதிகாரமும் சென்றதற்கு காரணம் தி.மு.க தான். நீட் தேர்வு நடத்துவது மத்திய அரசு. அப்போது கலந்தாய்வை மத்திய அரசுதான் நடத்த வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அ.தி.மு.க-வின் கொள்கை. மாநில அரசின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது தி.மு.க தான். மாநில சுயாட்சிகளை விட்டுக் கொடுக்கக் கூடாது. நீட் தேர்வு கூடாது. மாணவர்கள் சேர்க்கை மற்றும் கல்வியை மாநில பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்பது அ.தி.மு.க-வின் கொள்கை. அதனை பா.ஜ.க பறிப்பது கண்டனத்திற்குரியது.

மின் கட்டண உயர்வுக்கு உதய் திட்டத்தில் அ.தி.மு.க கையெழுத்திட்டது தான் காரணம் என முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு அ.தி.மு.க கையெழுத்து போட்டதால் மின்கட்டண உயர்வு என முதலமைச்சர் பேசுகிறார். அவருக்கு திறமை இருந்தால் உதய் திட்டத்தில் இருந்து வாபஸ் பெறட்டும். உதய் திட்டத்தில் குறைகள் இருந்தால் அந்த திட்டத்திலிருந்து பின்வாங்கட்டும்’’ எனத் தெரிவித்தார்.

-பொய்கை. கோ.கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com