'அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் எனது வீட்டிற்கு சோதனைக்கு வந்துள்ளனர் என்று நண்பர்கள் மூலம் தகவல் அறிந்த உடன், நடைபயிற்சியை பாதியிலேயே முடித்துக் கொண்டு, டாக்ஸி பிடித்து வந்துள்ளேன். என்ன நடக்கிறது என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்' என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, அவரது சகோதரர் அசோக் குமார் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் அறிந்த செந்தில் பாலாஜி, நடைபயிற்சியை பாதியிலே முடித்துக் கொண்டு அவசரமாக வீடு திரும்பினர்.
அப்போது, அவரது வீட்டின் முன்பு கூடியிருந்த, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “அமலாக்கத் துறை சோதனை குறித்து நண்பர்கள் தகவல் தெரிவித்தனர். அதனால், நடைபயிற்சியை பாதியில் முடித்துக் கொண்டு, டாக்ஸி பிடித்து வந்தேன்.
அமலாக்கத் துறை சோதனை குறித்து, சட்டப்படி எனக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். அதுபோல, அமலாக்கத்துறை சோதனைக்கும் முழு ஒத்துழைப்பு தருவோம்.
சோதனை முடிந்த பின்னர் முழு விவரம் தெரியவரும். சோதனை முடிவில் தான் என்ன நோக்கத்துடன் வந்துள்ளார்கள் என்று தெரியும். என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம். ” என்றார்.