டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்து வந்ததாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் இல்லத்திற்கு மேலே ட்ரோன்களும், ஆளில்லா விமானங்களும் பறக்கக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று அப்பகுதியில் ஆளில்லா விமானம் பறந்ததாக தகவல் கிடைத்ததாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். சிறப்பு பாதுகாப்புக் குழு காலை 5:30 மணிக்கு காவல்துறையைத் தொடர்பு கொண்டது. அதனடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது" என அதிகாலை ஒரு அறிக்கையில் போலீஸார் தெரிவித்தனர்.
பிரதமர் இல்லம் அருகே அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இருப்பது குறித்து என்.டி.டி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்ததை புது டெல்லி டிசிபியும் உறுதிப்படுத்தினார்.
அருகில் உள்ள பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அதுபோன்ற பொருள் எதுவும் சிக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். "விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையும் (ATC) தொடர்பு கொள்ளப்பட்டது. அவர்களும் பிரதமரின் இல்லத்திற்கு அருகில் பறக்கும் பொருள் எதையும் கண்டறியவில்லை" என்று மேற்கோளிட்டுள்ளது.