'திராவிடத்துக்குள்தான் ஆன்மிகம் உள்ளது, திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரித்து பார்க்க முடியாது' என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் இறுதிக்கட்ட பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, 'கலைஞர் நூலக கட்டிடம் 132 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்திற்கு 60 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது.
மொத்தமாக கலைஞர் நூலகத்திற்கு 215 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கலைஞர் நூலகப் பணிகள் வரும் 10 -ம் தேதிக்குள் முடிவடைந்துவிடும்.
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட உள்ளது. எனவே, கலைஞர் நூலகத்தை வரும் 15 -ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்ட முடியாது. எடப்பாடி பழனிச்சாமி 50 சதவீதம் கூட தகுதி இல்லாதவர். கலைஞரிடம் பயிற்சி பெற்றவர் மு.க.ஸ்டாலின்; எடப்பாடி யாரிடம் பயிற்சி பெற்றார். அவரிடம் என்ன தகுதி உள்ளது. எதுவுமே இல்லை.
மாமன்னன் படம் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆத்திரத்தில் பேசி வருகிறார். மாமன்னன் படத்தில் அமைச்சர் உதயநிதியின் கதாபாத்திரம் மிகசிறப்பாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்த சமூகத்துக்கான படம்தான் மாமன்னன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. திராவிடத்துக்குள்தான் ஆன்மிகம் உள்ளது. எனவே, திராவிடத்தையும், ஆன்மிகத்தையும் பிரித்து பார்க்க முடியாது' என்றார்.