பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்.14-ம் தேதி ’திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில் திமுக அமைச்சர்களான எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் எம்.பி.க்களான கனிமொழி, ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்து பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்கள் வெளியிடப்பட்டது.
இந்த சொத்து பட்டியல் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட பல திமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதனை தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். ”அண்ணாமலை என்னை பற்றி வெளியிட்ட கருத்துக்கள் பொய்யானது. அது எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை கூறிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் கூறியிருந்தார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் இந்த அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.