தேசிய மருத்துவர்கள் தினத்தை ஒட்டி பல தனியார் மருத்துவமனைகள் நிகழ்ச்சிகளை நடத்த, பலரும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல, தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
ஆனால், தமிழகத்தின் சுகாதாரம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மருத்துவர்களுக்கு ஒரு வாழ்த்து செய்தி கூட வெளியிடவில்லை. இது குறித்து மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டாலும் 'இவர்கிட்ட பெருசா எதிர்பார்க்கக் கூடாது. இவருக்கு அலோபதி மருத்துவர்களை எப்போதுமே பிடிக்காது' என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.
'இவர் எப்போதுமே மாற்று மருத்துவத்தை தான் ஆதரிக்கிறார். கண்ட கண்ட தினத்தை எல்லாம் கொண்டாடுகிறார், மருத்துவத்துறையினர் சாதனைகளை செய்து விட்டால் அதன் பெருமையை தான் எடுத்துக் கொள்கிறார். அதனால் இதை கண்டு கொள்ள வேண்டாம்' என்று இன்னொரு தரப்பு மருத்துவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதைத்தவிர பெரும்பாலான மருத்துவர்கள் ஒரு வேதனையான மனநிலையிலேயே இருக்கிறார்கள்.
'இவர் வாழ்த்து சொல்லி மட்டும் என்ன ஆகிறது? ஆகிவிடப்போகிறது ? 2021 இல் பதவிக்கு வந்தபோது முதலமைச்சரை சந்திக்க வைக்கிறேன்' என்று சொன்னார். அதையே இன்னும் செய்யவில்லை. 'இப்படி மருத்துவர்களின் அதிருப்தியை திசை திருப்பத்தான் வாழ்த்து கூட சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்' என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள்.
ஏற்கனவே விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் போது அவருக்கு ஆதரவான ஒரு சங்கம் இருந்தது. அது இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 'அந்த சங்கத்தையும் இன்னொரு சங்கத்தையும் ஒன்றாக இணைந்து இணைத்துக்கொண்டு வாருங்கள். முதலமைச்சரை பார்க்கலாம்' என்று இவர் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால், போக்குவரத்து துறையில் இப்படி இரண்டு கட்சி சார்ந்த தொழிலாளர் சங்கங்கள் இருந்தாலும் கூட அவர்கள் இணைந்து பல்வேறு விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி மருத்துவமனை திறக்கப்பட்ட போது கூட அந்த மருத்துவமனைக்கு குறைந்த அளவிலேயே புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களை பிரித்து அங்கே எடுத்துக் கொண்டார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து செவிலியர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியக்கூடிய சென்னையில் பணிபுரிய விருப்பம் இருந்த மருத்துவர்களை எடுத்துக் கொண்டார்கள்.
திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 30 மருத்துவர் பணியிடங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை இன்னும் அதிகரித்து சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மொத்தத்தில் சுகாதாரத் துறை சுகவீனமாய் கிடக்கிறது. இதில் வாழ்த்து சொல்லி மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது ?