தூத்துக்குடி: ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு செய்த பா.ஜ.க -அதிர்ச்சியில் தி.மு.க

'’வேறு யாருக்கும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. மீறி செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’
பா.ஜ.க நிர்வாகிகள்
பா.ஜ.க நிர்வாகிகள்

தூத்துக்குடியில் நடந்து வரும் ஸ்மார்ட் திட்ட பணிகளை பா.ஜ.க-வினர் திடீரென்று ஆய்வு செய்ததால் தி.மு.க-வினர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

மத்திய அரசின் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகள் ஆட்சி மாறிய பிறகும் வேகமாக நடந்து வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தினசரி காலை, மாலையும் ஏதாவது ஒரு பணியை ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் நேற்று ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பா.ஜ.க ஓபிசி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ் தலைமையில் இந்த ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. இது பற்றி விவேகம் ரமேஷிடம் கேட்டதற்கு, "இந்தியாவில் இருக்கும் நகரங்கள் அழகு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், திராவிட கட்சிகள் அதை சொந்தம் கொண்டாடி வருகிறது. அந்தப் பணியில் ஏகப்பட்ட ஊழல்களும் நடந்து வருகிறது.

எனவே ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று எங்கள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விரும்பினார். அதற்காக மாவட்டம் தோறும் குழுவினை அமைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தோம். சில பணிகள் திருப்திகரமாகவும் சில பணிகள் திருப்தி இல்லாமலும் இருக்கிறது. இது பற்றி ஒரு அறிக்கை தயார் செய்து எங்கள் மாநில தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைப்போம்" என்றார்.

இதற்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி என்ன சொல்கிறார் என அவரிடம் கேட்டோம் "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பொறுத்த வரை மத்திய அரசு 50 சதவீதமும் மாநில அரசு 50 சதவீதமும் நிதி வழங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் நிர்வாகத்திற்கு வரும் வரை தூத்துக்குடி மாநகராட்சியில் 20 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை. தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு அதற்கு அனைத்து வேலைகளும் வேகம் பிடிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அந்த அளவுக்கு நிதியையும் ஒதுக்கி வருகிறது.

இந்தப் பணிகளை ஆய்வு செய்ய எம்.பி தலைமையில் கலெக்டர், மேயர், மாநகராட்சி கமிஷனர், எம்எல்ஏ ,மேலும் சமூக அமைப்பை சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஆறு மாதத்திற்கு ஒருமுறை கூடி ஆலோசனை செய்யும். இந்தக் குழுக்கள் தான் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்யவும் உரிமை இருக்கிறது. வேறு யாருக்கும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. மீறி செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com