’பெரியார், அண்ணா பெயரைச் சூட்டாத தி.மு.க வாரிசு அரசியல் வீட்டுக்குப்போகும்’- முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆரூடம்

அரசு மக்களைப் பற்றி கவலைப்படாமல் டாஸ்மாக்கில் எந்த சரக்கில் பற்றாக்குறையாக உள்ளது எந்த சரக்கு விற்பனையாகவில்லை என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
’பெரியார், அண்ணா பெயரைச் சூட்டாத தி.மு.க வாரிசு அரசியல் வீட்டுக்குப்போகும்’- முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆரூடம்

’’மக்கள் வரிப்பணத்தின் மூலம் வழங்கும் மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கு கருணாநிதி பெயர். அந்தத் திட்டத்தை கருணாநிதி பேரன் உதயநிதி வழங்குகிறார். இதை முதலமைச்சர் ஸ்டாலின் கண்காணிக்கிறார். நிச்சயம் இந்த வாரிசு அரசியல் வீட்டுக்குப் போகும்’’என ஆரூடம் தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் உதயக்குமார்.

இதுகுறித்து பேசிய அவர், "புரட்சித்தலைவி அம்மாவுக்கு பிறகு தாய் இல்லாத பிள்ளைகளாய் நாம் தவித்த போது இந்த இயக்கத்தையும், இயக்கத் தொண்டர்களை காப்பாற்ற கலங்கரை விளக்கமாய் எடப்பாடியார் நமக்கு கிடைத்தார். இந்த இயக்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையில் உலக அளவில் ஏழாவது இடத்திற்கும், இந்திய அளவில் மூன்றாவது இடத்திற்கும், தமிழகத்தில் முதலிடத்திற்கு கொண்டு சென்றார். உலகத்திலே ஏழைகளுக்கான ஒரே மக்கள் இயக்கமாக அ.தி.மு.க உள்ளது.

ஒரு கிளைக் கழகச் செயலாளர் நாட்டின் முதலமைச்சராக ஆகலாம். ஒரு கிளைக் கழகச் செயலாளர் ஒரு இயக்கத்தின் கழகப் பொதுச் செயலாளராக வரலாம் என்று தன் உழைப்பால் இன்று எடப்பாடியார் நிரூபித்துள்ளார். தி.மு.க ஆட்சியில் காய்கறி விலை உயர்ந்து விட்டது. அதனை தொடர்ந்து மளிகை பொருள் விளையும் உயர்ந்துவிட்டது. இதனால் மக்களுக்கு கூடுதல் சுவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு மக்களைப் பற்றி கவலைப்படாமல் டாஸ்மாக்கில் எந்த சரக்கில் பற்றாக்குறையாக உள்ளது எந்த சரக்கு விற்பனையாகவில்லை என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாட்டில் 90 சகவீதம் பெண்களுக்கு பட்டை நாமம் கிடைக்கும். எதற்கெடுத்தாலும் கலைஞர் பெயரை முதலமைச்சர் சூட்டுகிறார். பெண்கள் உரிமை தொகையை திட்டத்திற்கு திராவிட இயக்கத்திற்காக பாடுபட்ட தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா பெயரை சூட்டலாம். ஆனால் அவர்களுக்கு மனம் இருக்காது.

நாங்கள் முதியோர் உதவித் தொகையை ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கும்போது யார் பெயரையும் வைக்கவில்லை. மக்கள் வரிப்பணத்தின் மூலம் வழங்கும் ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கு கருணாநிதி பெயர். அந்த திட்டத்தை கருணாநிதி பேரன் உதயநிதி வழங்குகிறார். இதை முதலமைச்சர் ஸ்டாலின் கண்காணிக்கிறார். நிச்சயம் இந்த வாரிசு அரசியல் வீட்டுக்குப் போகும். எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும். இனி அ.தி.மு.க-வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது’’என கூறினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com