'அதிகாரத்தால் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருக்கின்றவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

'அதிகாரத்தால் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது' என்றும் 'மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருக்கின்றவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை' என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில், ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.

பின்னர், பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களோடு அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், தோழர் ஜீவானந்தம், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் வழியில் வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து செயல்படக்கூடிய அரசாக தி.மு.க அரசு இருக்கும்.

தன்னைத் தாக்குபவர்களையும் தாங்கி நிற்கிற நிலம் போன்றது திராவிட இயக்கம். தமிழகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் நான் தான் முதலமைச்சர் என்பதால், அவர்களுக்காக என்னால் முடிந்த அளவு பணியாற்றுகிறேன். ஓய்வின்றி உழைக்கிறேன். என் சக்திக்கு உழைக்கிறேன்.

அந்த உழைப்பின் பயனை தமிழ்நாட்டு மக்களான உங்களுடைய முகங்களில் பார்க்கிறேன். வார்த்தைகளில் கேட்கிறேன். நீங்கள் காட்டுகின்ற அன்பில் கரைகிறேன். என்னை நம்பி நீங்கள் ஒப்படைத்த பணியை சரியாக செய்து கொண்டு உள்ளேன்.

இந்த 2 ஆண்டுகளில் நமது அரசு நிறைவேற்றிய திட்டங்களால் பயனடைந்தவர்கள் இங்கே பேசும்போது, ஒவ்வொரு வார்த்தையும் உதட்டிலிருந்து வரவில்லை, அவர்களது இதயத்தில் இருந்து வருகிறது என்பதை நான் அறிவேன்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று திருக்குறள் சொல்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்பது திராவிட மாடல். மக்களை சாதியால், மதத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் பிரித்துப் பார்க்கிறவர்களுக்கு திராவிட மாடல் புரியாது. மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருக்கின்றவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com