ஓசியில் ஸ்நாக்ஸ் கேட்டு தி.மு.க-வினர் அராஜகம்- மாமன்னன் படம் பார்த்த தியேட்டரில் அதிர்ச்சி

''மாமன்னன் படம் மூலம் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று தி.மு.க தலைமை நினைத்திருந்த நேரத்தில்...''
தகராறில் ஈடுபடும் தி.மு.க நிர்வாகிகள்
தகராறில் ஈடுபடும் தி.மு.க நிர்வாகிகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஆகியோர் வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படம் கடந்த 29 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற சமூக நீதியை பேசும் திரைப்படம் என்றதால் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். ஆகையால் மாமன்ன்னன் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் தி.மு.க. நிர்வாகிகள் தியேட்டர்களுக்கு சென்று பார்த்து வருகின்றனர்.

தூத்துக்குடி, வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் கடந்த 2 ஆம் தேதி இரவு 6.30 மணி காட்சியில் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் நிர்வாகிகளுடன் மாமன்னன் திரைப்படத்தை பார்த்தார். தி.மு.க-வினர் படம் பார்ப்பதற்காக அந்தக் காட்சியை அமைச்சர் புக்கிங் செய்திருந்தார்.

அமைச்சருடன் அவரது கணவர் ஜீவன் ஜேக்கப், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் மற்றும் நிர்வாகிகள் மாமன்னன் திரைப்படத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து, 10.30 காட்சியிலும் தி.மு.க.வினர் சிலர் படம் பார்க்க முடிவு செய்து உள்ளனர். ஆனால், குறிப்பிட்ட சிலர் மட்டுமே டிக்கெட் எடுத்துள்ளனர்.

தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அமைச்சர் கீதா ஜீவன் பெயரைப் பயன்படுத்தி தி.மு.க. பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகி வில்சன் ஆகியோர் தலைமையிலான தி.மு.க.வினர் அமைச்சர் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படத்தை இரவு 10.30 மணி காட்சியில் டிக்கெட் ஏதும் எடுக்காமல் பார்த்ததுடன், பட இடைவேளையின் போது பணம் ஏதும் கொடுக்காமல் பாப்கான் கேட்டு திரையரங்க ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

தகராறு முற்றவே திரையரங்கு உரிமையாளர் பாலகிருஷ்ணன், மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த மத்திய பாகம் காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினரிடம் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மிரட்டும் தொணியில் பேசினார்கள்.

அதைத் தொடர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவதூறான வார்த்தைகளை பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தி.மு.க. பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகி வில்சன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் போலீசாருடனும், திரையரங்க உரிமையாளருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம காணும் வகையில், திரையரங்கில் உள்ள சிசிடிவி காட்சிகள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றைக் கொண்டு மற்ற தி.மு.க நிர்வாகிகளையும் வழக்கில் சேர்க்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாமன்னன் படம் மூலம் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று தி.மு.க தலைமை நினைத்திருந்த நேரத்தில் தூத்துக்குடி தியேட்டரில் நடந்த இந்த சம்பவம் அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com