'தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது' என அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் அ.ம.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
அப்போது, அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன் பேசுகையில், தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு ஒரு சில சுயநலவாதிகள் கையில் உள்ள ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்டு எடுப்பதற்காக என்னுடன், ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கைகோர்த்துள்ளனர். இது இயற்கையாக ஏற்பட்ட நிகழ்வு. தேவைக்காக ஏற்பட்ட நிகழ்வு அல்ல.
காலத்தின் அருமை கருதி, நாம் பிரிந்து இருந்தால் தி.மு.க., என்னும் தீயசக்தியை வீழ்த்த முடியாது என்பதாலும், ஆட்சியில் இருந்துக் கொண்டு தமிழக மக்களை வாட்டி வதைப்பதை தட்டிக்கேட்பதற்கும், ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக இணைந்துள்ளோம்.
எங்களின் இணைப்பு தமிழகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா அலங்காரத்தில் தலைவர் பதவியை, யாரோ ஒருவரால் களபேரம் செய்து விட்டார்கள்.
சுயநலவாதிகளிடம் இருந்து அதை மீட்டெடுக்க தான், நானும், ஓ.பி.எஸ்., இருவரும் இணைந்து இருக்கிறோம். இதை, ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன் வெளிப்பாடு வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழக முழுவதும் எதிரொலிக்கும்.
ஜெயலிலதாவின் தொண்டர்கள் தான் தி.மு.க.,வை வீழ்த்த முடியும். கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழுவுடன் அ.தி.மு.க-வுக்கு அவர்கள் சமாதிக்காட்டி விட்டார்கள் என்பதை உணர்ந்து, இன்றைக்கு அ.தி.மு.க., தொண்டர்கள், அ.ம.மு.க தொண்டர்களுடன் தமிழகம் முழுவதும் கைகோர்த்து வருகிறார்கள்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பு எது எல்லாம் தமிழகத்திற்கு வேண்டாம் என்ற போராட்டம் நடத்தினரோ, அதை அப்போது வேண்டும் என்கிறார். ஸ்டாலின் தலைமையில் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பு ஆட்சிக்கு வர வேண்டும் என தேன் தடவிய வார்த்தைகளால் பேசி விட்டு, திரவத்தை ஊற்றி தமிழக மக்களை ஸ்டாலின் நோகடித்துக் கொண்டு இருக்கிறார்.
இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்ககூடிய காலம் நெருங்கி விட்டது. ஜெயலிலதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்படும் போது, நிச்சயம் தி.மு.கவை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற முடியும் என நம்பிக்கை' தெரிவித்தார்.